08 பெப்ரவரி 2024 வியாழக்கிழமை அன்று யாழ் ஈழநாடு பத்திரிகையில் இருந்து..
கனடாவிலிருந்து நண்பர் ஒருவர் ஒரு காணொலி ஒன்றை அனுப்பியிருந்தார். அதனைப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை. ஏதேனும் முக்கியமாக இருந்தால் மாத்திரமே என்னோடு விடயங்களை பகிர்பவர் அவர்.
அதனால் அதனைப்பார்க்கத் தொடங்கியபோது தான் அது கனடிய தமிழ் காங்கிரஸ் அமைப்பினர் நடத்திய ஊடக சந்திப்பு என்பது புரிந்தது.
அண்மைக்காலமாக அந்த அமைப்புக்கு எதிராக தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்க ளின் சங்கமும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றது. கனடாவிலும் பலரும் அந்த அமைப்புக்கு எதிராகக் குரல் எழுப்பி வருகின்றனர்.
அண்மையில் அவர்களின் அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடைபெற்றிருந்தது.
இவை எல்லாம் எதனால் நடைபெறுகின்றது?
ஒரு காலத்தில் கனடா தமிழர்களின் அடையாளமாக விளங்கிய இந்த அமைப்பு, அண்மையில் இது போன்ற கண்டனங்களுக்கு உள்ளாகிவருவது எதனால் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.
சி. ரி. சி. என்று நன்கு அறியப்பட்ட இந்த கனடிய தமிழ் காங்கிரஸ் நீண்டகால மாகவே தாயகத்தில் ஓர் அரசியல்வாதியுடன் நெருக்கமாகவே செயல்பட்டு வருவது ஒன்றும் இரகசியமானது அல்ல.
இந்த நிலையில் அண்மையில் உலகத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் செய்யப்பட்ட ‘இமாலய பிரகடனம்’ இப்போது கனடிய தமிழ் காங்கிரஸ்க்குள்ளும் சர்ச்சையை உருவாக்கியிருக்கின்றது.
உலகத் தமிழர் பேரவை என்பது கனடிய தமிழ் காங்கிரசையும் சேர்த்த ஒரு நிறுவனமே தவிர அது ஒரு தனிப்பட்ட அமைப்பு அல்ல. உலகத் தமிழர் பேரவையில் ஓர் அங்கமாக இருக்கும் பிரித்தானிய தமிழர் பேரவையின் சுரேன் சுரேந்திரனே இன்று அந்த அமைப்பை முழுக்க முழுக்க இயக்குகின்றார் என்பதும் தெரிந்ததுதான்.
அவர்களின் இந்த ‘இமாலய பிரகடனம்’ குறித்து ஏற்கனவே இந்தப் பத்தியில் பல தடவைகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியாகிவிட்டது. போர்க்குற்றம் குறித்தும் பொறுப்புக்கூறல் குறித்தும், நாடு தழுவிய பிரசாரத்தை மாவட்டம் தோறும் தொடங்கப்போவதாக அறிவித்திருந்தார்கள். ஜனவரியிலிருந்து இந்தக் கலந்துரையாடல் தெற்கில் அவர்களின் பௌத்த பிக்குகளால் தொடங்கப்படும் என்று தெரிவித்திருந்தபோதிலும் அப்படி எந்தவொரு கலந்துரையாடலும் இன்று பெப்ரவரி மத்தியை நெருங்கும் இவ்வேளையிலும் தொடங்கியதாக எங்கும் நாம் அறியவில்லை.
அதுவல்ல இன்று இங்கே பேசப்படவேண்டியது. சி. ரி.சியின் ஊடக சந்திப்பில் அவர்களின் சார்பில் கலந்துகொண்டவர்கள், தெரிவித்த சில வியடங்களே எமது கவனத்தைப் பெற்றிருக்கின்றன.
இமாலய பிரகடனம் என்பது உலகத் தமிழர் பேரவை முன்னெடுத்த முயற்சி என்றும் அதற்கு தமது அமைப்பும் ஆதரவு வழங்கியதாகவும் அந்த ஊடக சந்திப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதன்மூலம் அவர்கள் சொல்ல வருவது, உலகத் தமிழர் பேரவையில் தமது அமைப்பு ஓர் அங்கம் இல்லை என்பதையா? அல்லது அவர்கள் செய்கின்ற எதனையும் நாங்கள் கேள்விக்கு உட்படுத்தாமல் ஆதரிப்போம் என்பதையா என்று தெரியவில்லை.
இந்தப் பிரகடனத்தை இலங்கையில் விற்பதற்கான ‘மார்க்கெற்றிங்’ செய்வதற்காக வந்திருந்தவர்களில் ஒருவர், கனடிய தமிழ் காங்கிரசை சேர்ந்தவர். ஆனால், அந்தப் பிரகடனம் குறித்து தமது அமைப்புக்குள் எந்த கலந்துரையாடல்களும் நடக்கவில்லை என்பதையும் அந்த ஊடக மாநாட்டில் உறுதி செய்தார்கள்.
ஆக, நமது அரசியல் கட்சிகள் மாத்திரமல்ல, இன்று புலம் பெயர்ந்த நாடுகளில் இயங்குகின்ற முக்கிய அமைப்புகள்கூட எப்படி இயங்குகின்றன என்பதற்கு இதைவிட விளக்கம் தேவையில்லை.
இவையெல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தது “கனடிய தமிழ் காங்கிரஸ் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான் என்று மனதார ஏற்றுக்கொண்டாலும் தாங்கள் பொதுவெளியிலோ அல்லது சர்வதேச இராஜதந்திரிகளுடனோ ‘இனப் படுகொலை’ என்ற வார்த்தையை பயன்படுத்துவதில்லையாம். ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் சொல்லப்பட்டதுபோல, போர்க்குற்றங்கள் என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்துவார்களாம்”.
இதனை கேட்டபோது இங்கு தாயகத்திலும் ஒருவர், ‘இனப் படுகொலை நடைபெற்றது என்பதை நிறுவுவதற்கு நம்மிடம் ஆதாரம் இல்லை’ என்று நல்லாட்சி காலத்தில் வியாக்கியானம் சொன்னதுதான் ஞாபகத்துக்கு வந்தது. அவர் தான் இலங்கையில் இருந்து இதைச் சொன்னார் என்றால், கனடா மண்ணிலிருந்து சொல்வதற்கு இவர்கள் ஏன் யோசிக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. கனடாவில் ஒன்ராறியோ மாகாண அரசு ‘இனப்படுகொலை கல்வி வாரத்தை’சட்டமாக்கி வைத்திருக்கின்றபோது, இவர்கள் இப்படிச்சொல்ல முடியவில்லை என்று விளக்கமளிக்கின்றனர்.
தாயகத்தில் உள்ள மக்கள் இப்போது இங்குள்ள தலைவர்கள் மீது நம்பிக்கையிழந்து புலம்பெயர் தமிழர்கள் ஏதாவது செய்வார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அந்த நம்பிக்கையும் விரைவில் தகர்ந்துபோகும் என்பதையே இந்த சம்பவங்கள் உணர்த்துகின்றன.
- ஊர்க்குருவி.
நன்றி: ஈழநாடு (08 பெப்ரவரி 2024 வியாழக்கிழமை அன்று யாழ் ஈழநாடு பத்திரிகையில் இருந்து..
)