Reading Time: < 1 minute

கனடாவுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்க இந்தியா உதவும் என கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

கனேடியப் பிரதமர் விடுத்த அழைப்பை ஏற்று இந்த உறுதிமொழியை இந்தியப் பிரதமர் நேற்று வழங்கியுள்ளார்.

கொரோனா தடுப்பூசிகளை சொந்தமாகத் தயாரித்துள்ள இந்தியா, உலகில் தடுப்பூசியின் முக்கிய விநியோகத்தராக வேகமாக வளர்ந்து வருகிறது.

அதேநேரம் கனடா சொந்த தடுப்பூசி உற்பத்தி வசதிகளைக் கொண்டிருக்கவில்லை. நாட்டுக்குத் தேவையான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள வெளிநாடுகளையே கனடா நம்பியிருக்கிறது.

இந்நிலையில் எனது நண்பர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் இருந்து கோவிட்19 தடுப்பூசி கோரி அழைப்பு வந்ததில் மகிழ்ச்சி. கனடா கோரிய கோவிட் தடுப்பூசிகளை வழங்குவதற்கு இந்தியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என அவருக்கு உறுதியளித்துள்ளேன் என பிரதமர் நரேந்திர மோடி தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டம் மற்றும் கொரோனா தொற்று நோய் நெருக்கடியால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான போராட்த்தில் கனடாவுடன் இணைந்து இந்தியா போராடும் எனவும் ஜஸ்ரின் ட்ரூடோவுக்கு உறுதியளித்ததாகவும் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசி நிறுவனங்கள் கனடாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் பெப்ரவரி மாதத்தில் அந்நாட்டுக்கு வழங்க வேண்டிய தடுப்பூசிகளை வழங்கவில்லை. மட்டுப்படுத்தப்பட்ட அளவு தடுப்பூசிகளே கனடாவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த வாரம் இது குறித்து கருத்து வெளியிட்ட பிரதமர் ட்ரூடோ, தடுப்பூசி விநியோகத்தில் தற்காலிக இடையூறுகள் இருந்தாலும் தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் கனடா வெற்றிபெறும் எனக் கூறினார்.

அத்துடன், தடுப்பூசி போட விரும்பும் அனைத்துக் கனேடியர்களுக்கும் செப்ரெம்பர் மாதத்துக்குள் தடுப்பூசி போடப்படும் எனவும் உறுதியளித்தார்.

இதேவேளை, தடுப்பூசி விநியோகத்தில் இணைந்து செயற்பட இந்தியா – மற்றும் கனேடியப் பிரதமர்கள் இணைங்கியுள்ளதாக இருவருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து கனேடியப் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத்தில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முயற்சிகள் மற்றும் பங்களிப்பு குறித்து பிரதமர் ட்ரூடோ இந்தியப் பிரதமருடனான பேச்சின்போது மகிழ்ச்சி வெளியிட்டதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்ட்ராஜெனெகா, நோவாவாக்ஸ் மற்றும் ஜோன்சன்&ஜோன்சன் உள்ளிட்ட பல மேற்குலக மருந்து நிறுவனங்கள், இந்திய மருந்து உற்பத்தியாளர்களுடன் இணைந்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தடுப்பூசிகளை தயாரிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.