Reading Time: < 1 minute

ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்றாசெனிக்கா நிறுவனங்களின் இணைத் தயாரிப்பான அஸ்ட்றாசெனிக்கா தடுப்பு மருந்தின் பாவனையைத் தற்காலிகமாக நிறுத்துவதாக ஒன்ராறியோ மாகாண அரசின் முதன்மை மருத்துவ அதிகாரி அறிவித்திருக்கிறார்.

மிகவும் அரிதான. ஆனால் உயிராபத்தை விளைவிக்கக்கூடிய இரத்தக்கட்டிகள் உருவாகும் ஆபத்தை முன்னிட்டும், வழங்கலில் இருக்கும் சீரின்மை குறித்தும் இம் முடிவை எடுப்பதாக ஒன்ராறியோ முதனமை மருத்துவ அதிகாரி, டாக்டர் டேவிட் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

கனடாவில் இதுவரை 2 மில்லியன் மக்களுக்கு அஸ்ட்றாசெனிக்கா தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 12 பேருக்கு, இம் மருந்தின் தாக்கத்தால் இரத்தம் கட்டியாகும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இவர்களில் மூன்று பெண்கள் இறந்துள்ளனர். ஒன்ராறியோ மாகாணத்தில், மே 8ம் திகதி வரை, 8 பேருக்கு இரத்தம் கட்டியாதல் சம்பவித்திருக்கிறது.

இரத்தம் கட்டியாதல் சம்பவங்கள் அதிகரித்து வந்தமையின் காரணத்தால் அதன் பாவனையைத் தற்காலிகமாக நிறுத்தி நிலைமைகளை ஆராய்ந்து செயற்படுவதே நால்லது எனத் தாம் கருதுவதாக, ஒன்ராறியோ மாகாணத்தின் சுகாதார பாதுகாப்பு மற்றும் அவசரகாலத் தயாரிப்பு நிலைக்குப் பொறுப்பான அதிகாரியான டாக்டர் ஜெசிக்கா ஹொப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

இரத்தம் கட்டியாதல் நிகழ்வதற்கான சாத்தியம் முன்னர் அறிவிக்கப்பட்ட 100,000 த்தில் ஒன்று என்ற நிலையிலிருந்து 60,000 த்தில் ஒன்று என்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறது.

அஸ்ட்றாசெனிக்கா மீதான இத் தற்காலிகத் தடை எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என இப்போது கூற முடியாவிட்டாலும், விரைவில் இது பற்றி அறிக்க ஒன்று வெளிவரவிருப்பதாக டாக்டர் ஹொப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

ஒன்ராறியோ மாகாணத்துக்கு வழங்கப்பட்ட 707,000 அஸ்ட்றாசெனிக்கா மருந்துப் புட்டிகளில் 49,280 இன்னும் கையிருப்பில் உள்ளது. மீதியை எப்போ வழங்குவதென்பது மத்திய அர்சில் தங்கியுள்ளதென மாகாணத்தின் மருந்து வழங்கல் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் டேர்க் ஹூயெர் தெரிவித்துள்ளார்.

இதே வேளை, அல்பேர்ட்டா மாகாணமும், பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு, அஸ்ட்றாசெனிக்கா மருந்தின் முதலாம் கட்ட வழங்கலை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.