கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள நெடுஞ்சாலை 403-இல், கார்டன் அவென்யூவிற்கு மேற்கே வெள்ளிக்கிழமை மாலை நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாலை 6 மணியளவில் மேற்கு நோக்கிச் செல்லும் வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், உடனடியாக அவசரகால மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் சிக்கிய சாரதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த ஏனைய நபர்கள் பிராண்ட்ஃபோர்ட் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்த விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்ததால், நெடுஞ்சாலை 403-இன் மேற்கு நோக்கிய வீதி கார்டன் அவென்யூவிலும், கிழக்கு நோக்கிய வீதி வெய்ன் கிரெட்ஸ்கி பார்க்வேயிலும் மூடப்பட்டன.
விசாரணைகள் காரணமாக இந்த வீதித் தடைகள் ஆறு முதல் எட்டு மணித்தியாலங்கள் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகப் பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர்.
விபத்து இடம்பெற்ற நேரத்தில் அப்பகுதியூடாகப் பயணித்த சாரதிகள் தமது வாகனங்களின் கண்காணிப்புக் கமரா (Dashcam) காட்சிகளைப் பரிசோதித்து, ஏதேனும் தகவல்கள் இருந்தால் 1-888-310-1122 என்ற இலக்கத்தின் ஊடாகப் பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.