பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் அல்பெர்ட்டா மாகாணத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனைக் கனடாவின் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஐசிஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இணையப் பயனாளர்களுக்கும், சந்தேகநபரான சிறுவனுக்கும் இடையே நடந்த இணையவழித் தொடர்புகள் குறித்துக் கனடா அரச காவல் துறையின் ஒருங்கிணைந்த தேசியப் பாதுகாப்புச் சட்ட அமலாக்கக் குழு கடந்த பெப்ரவரி மாதம் விசாரணையைத் தொடங்கியது.
நீண்ட விசாரணைக்குப் பிறகு, கடந்த அக்டோபர் 26-ஆம் திகதி அந்தச் சிறுவனைப் பொலிஸார் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, பல நிபந்தனைகளுடன் அந்தச் சிறுவன் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், செவ்வாய்க்கிழமை ஃபோர்ட் மெக்முரே நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளான்.
இளையோர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் கீழ், சிறுவனின் பெயர் உள்ளிட்ட விபரங்களை வெளியிட சட்டப்பூர்வத் தடை உள்ளது. இச்சம்பவம் குறித்து மேலதிக விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
தேசியப் பாதுகாப்புக்கு உடனடி அச்சுறுத்தல் ஏதேனும் இருப்பதாகத் தெரியவந்தால், உடனடியாக 911 அல்லது உள்ளூர் பொலிஸ் நிலையத்தைத் தொடர்பு கொள்ளவும்.
பிற தகவல்களுக்கு பொலிஸ் தேசியப் பாதுகாப்புத் தகவல் அமைப்பை 1-800-420-5805 என்ற தொலைபேசி எண் வழியாகவோ அல்லது rcmp.ca/report-it என்ற இணையதளம் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.