குழந்தைகள் தொடர்பான 700-க்கும் மேற்பட்ட சட்டவிரோத ஆபாசக் கோப்புகளை தனது செல்போனில் வைத்துக்கொண்டு அமெரிக்க எல்லையை கடந்த கனடிய பிரஜை ஒருவருக்கு, அமெரிக்க நீதிமன்றம் ஆறரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கனடாவின் மொண்ட்ரியாலைச் சேர்ந்த 25 வயதான Shneur Gurkow, கடந்த 2025 ஆகஸ்ட் மாதம், நியூயார்க் மாநிலத்தில் உள்ள Alexandria Bay எல்லை நுழைவாயில் வழியாக அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ளார்.
அப்போது மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அவரது செல்போனில் குழந்தைகள் தொடர்பான 700-க்கும் மேற்பட்ட சட்டவிரோத ஆபாசக் கோப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட Gurkow, அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முன்னர் பல ஆண்டுகளாக சமூக வலைதளங்கள் மற்றும் வெளிநாடுகளை அடிப்படையாகக் கொண்ட கோப்பு பகிர்வு செயலிகள் மூலம் இத்தகைய சட்டவிரோத உள்ளடக்கங்களைப் பெற்றுவந்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து, 2026 செப்டம்பர் 15ஆம் தேதி, அவருக்கு அமெரிக்க பெடரல் நீதிமன்றம் ஆறரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
இந்த வழக்கை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு விசாரணைப் பிரிவு (HSI), அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை (CBP), நியூயார்க் மாநில காவல்துறையின் கணினிக் குற்றப்பிரிவு ஆகியவை இணைந்து விசாரித்துள்ளன.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் மற்றும் இணையவழி குற்றங்களை தடுக்கும் அமெரிக்க நீதித்துறையின் Project Safe Childhood திட்டத்தின் கீழ் இந்த வழக்கு முன்னெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.