Reading Time: 3 minutes

தமிழ்க் கனடிய கலை மற்றும் இசைத்துறையில் கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கி வரும் திரு. வைரமுத்து சொர்ணலிங்கம் அவர்களுக்கு, 7வது ரொறன்ரோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா – 2026 இன் வாழ்நாள் சாதனையாளர் விருது (Lifetime Achievement Award) வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Tamil Business Directory

ரொறன்ரோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவின் 7வது ஆண்டு நிகழ்வுகள் கடந்த செப்டம்பர் 25 முதல் 27ஆம் திகதி வரை நடைபெற்றன. செப்டம்பர் 25ஆம் திகதி யோர்க் சினிமாவில் ஆரம்ப விழா இடம்பெற்றதுடன், தொடர்ந்து இரண்டு நாட்கள் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் திரையிடப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 27ஆம் திகதி ஸ்காபுறோவில் அமைந்துள்ள Grand Cinnamon Banquet & Convention Centre மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற விருது வழங்கும் விழா மற்றும் இரவு விருந்து நிகழ்வின்போது வைரமுத்து சொர்ணலிங்கம் அவர்களுக்கு இந்த உயரிய கௌரவம் வழங்கப்பட்டது.

கலை மற்றும் இசைத்துறையில் அவர் ஆற்றிய நீண்டகாலப் பணி, தமிழ்க் கனடிய கலைச் சமூகத்தின் வளர்ச்சிக்காக வழங்கிய பங்களிப்பு மற்றும் பல ஆண்டுகளாக கலைத்துறைக்கு தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவு ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது.

எழுந்து நின்று மரியாதை செலுத்திய விருந்தினர்கள்

வைரமுத்து சொர்ணலிங்கம் அவர்களின் 35 ஆண்டுகால கலைப் பயணம் மற்றும் சேவைகள் மேடையில் நினைவுகூரப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது, நினைவுக் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

அந்தச் சிறப்புத் தருணத்தில் மண்டபத்தில் கூடியிருந்த விருந்தினர்கள் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினர். அன்றைய விருது விழாவின் மிகவும் உணர்வுபூர்வமானதும் மறக்கமுடியாததுமான தருணங்களில் ஒன்றாக இந்த நிகழ்வு அமைந்தது.

இந்த கௌரவம் தனிப்பட்ட சாதனைக்கான அங்கீகாரமாக மட்டுமன்றி, பல தசாப்தங்களாக கலை மற்றும் இசைத்துறையில் மேற்கொண்ட பயணத்திற்கும் சமூகத்திற்கு வழங்கிய பங்களிப்பிற்கும் கிடைத்த உயரிய அங்கீகாரமாக அமைந்தது.

கலைச் சாதனையாளர்களை கௌரவிக்கும் புதிய பரிமாணம்

திரைப்படங்களைத் திரையிடுவது, புதிய இயக்குநர்கள் மற்றும் திரைப்படக் கலைஞர்களை சர்வதேச அரங்கிற்கு அறிமுகப்படுத்துவது என்பவற்றுடன் மட்டுப்படாமல், கலை, திரைப்படம் மற்றும் இசைத்துறைகளுக்காக பல ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் சாதனையாளர்களையும் அங்கீகரித்து கௌரவிக்கும் முயற்சியையும் ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா முன்னெடுத்து வருகிறது.

ஒரு கலைஞரின் பல தசாப்தகால உழைப்பையும் சமூகத்திற்கான பங்களிப்பையும் அடுத்த தலைமுறைக்கும் பதிவு செய்து வைக்கும் கௌரவமாக வாழ்நாள் சாதனையாளர் விருது அமைய வேண்டும் என்பதே திரைப்பட விழாவின் நோக்கமாகும்.

சமூகத் தலைவர்கள், ஊடகப் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் முன்னணி வர்த்தகப் பெருமக்கள் முன்னிலையில், ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவின் தலைவர் செந்தூரன் நடராஜா மற்றும் விழா இயக்குநர் கிருத்திகா ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்த கௌரவிப்பு நிகழ்வு, அன்றைய விருது விழாவிற்கு தனித்துவமான சிறப்பையும் ஆழமான உணர்வுபூர்வ தருணத்தையும் ஏற்படுத்தியது.

பல மொழிகள், பல இனங்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர்கள் ஒன்றுகூடிய சர்வதேச மேடையில், தமிழ்க் கனடிய கலைத்துறையில் நீண்டகாலமாக பணியாற்றிய ஒருவரின் சேவை இவ்வாறு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

வைரமுத்து சொர்ணலிங்கம் அவர்களின் 35 ஆண்டுகால கலை மற்றும் இசைத்துறைப் பயணத்திற்கு வழங்கப்பட்ட இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது, அவரது நீண்டகால சேவையையும் பங்களிப்பையும் வருங்கால தலைமுறைக்கும் பதிவு செய்யும் முக்கியமான அங்கீகாரமாக அமைந்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.