Reading Time: < 1 minute

கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில் உள்ள கேம்போபெல்லோ தீவுக்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் சென்ற கனடிய லொறி ஒன்று, அமெரிக்க எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

Tamil Business Directory

அமெரிக்காவுடனான தற்போதைய வர்த்தகப் போரின் பின்னணியில் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்த புதிய கட்டுப்பாடுகளின் கீழ், பால் மற்றும் மதுபானங்களை அமெரிக்காவிற்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த லொறியில் பால் மற்றும் மதுபானங்கள் கொண்டு செல்லப்பட்டமையினாலேயே அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் அதனை எல்லைக் கடவையில் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்டின் கோடைக்கால ஓய்வு இடமாகப் புகழ்பெற்ற கேம்போபெல்லோ தீவு, நிலப்பரப்பு வழியே கனடாவின் ஏனைய பகுதிகளுடன் நேரடியாக இணைக்கப்படவில்லை.

இத்தீவிற்குச் செல்ல அமெரிக்காவின் மேய்ன் மாநிலத்தின் லூபெக் நகரம் வழியே செல்லக்கூடிய பாலம் மட்டுமே ஒரே நிலப்பரப்பு பாதையாகும். அங்கு சென்று அடைய மேய்ன் மாநிலத்தின் வழியாக சுமார் 80 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும்.

வழக்கமாக கனடா எல்லைப் சேவைகள் முகவர் நிலையத்தின் சிறப்பு அனுமதிப் பத்திரத்துடன் இத்தீவின் 1,000 க்கும் குறைவான மக்களுக்குத் தேவையான அஞ்சல் மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்லும் இந்த லொறி, அமெரிக்க எல்லைக்குள் எங்கும் நிறுத்தப்படாது என்ற உத்தரவாதத்துடன் சீல் வைக்கப்பட்டு இயக்கப்படுகிறது.

நீண்ட தாமதத்திற்குப் பின்னரே குறித்த லொறி விடுவிக்கப்பட்டதாகவும், பின்னர் படகுச் சேவை மூலம் அது தீவைச் சென்றடைந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

எனினும், கடுமையான குளிர்காலம் காரணமாக குறித்த பருவகாலப் படகுச் சேவை அக்டோபர் 12 ஆம் திகதியுடன் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

எனவே, இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த வர்த்தகத் தகராறு தீர்க்கப்படும் வரை தடைசெய்யப்பட்ட பொருட்களை லொறியில் கொண்டு செல்வதைத் தவிர்க்குமாறு தீவின் மேயருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஆலோசனைக் கூறியுள்ளார்.

மேலும், கனடிய நிலப்பரப்புடன் தீவை நேரடியாக இணைக்கும் நிரந்தரப் படகுச் சேவை ஒன்றின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.