அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் மீது 50 சதவீத பரஸ்பர வரியை விதிக்கத் தமது அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கனடாவின் சஸ்காட்செவன் மாகாண முதல்வர் ஸ்காட் மோ அறிவித்துள்ளார்.
இந்த வர்த்தக நடவடிக்கை வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடா மற்றும் சஸ்காட்செவன் மாகாணப் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள வரி உயர்வு மற்றும் அதற்குப் பதிலாக மேற்கொள்ளப்படும் எதிரடி வர்த்தக நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 22 அன்று கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மதுபானங்கள் மீது 50 சதவீத வரியைச் சுமத்தியதற்குப் பதிலடியாகவே சஸ்காட்செவன் மாகாணத்தின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
அமெரிக்க மதுபானங்களை கடைகளின் அலமாரிகளிலிருந்து முற்றிலுமாக அகற்றும் திட்டம் எதுவும் மாகாண அரசிடம் இல்லை என்பதை ஸ்காட் மோ தெளிவுபடுத்தியுள்ளார். மக்கள் தங்களுக்கான தேர்வை தாங்களே மேற்கொள்வதற்கு சுதந்திரம் அளிப்பதே எங்களது அரசின் முதன்மையான கொள்கை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சஸ்காட்செவனில் அமெரிக்க மதுபானங்களின் விற்பனை ஏற்கனவே 40 சதவீதம் சரிவடைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் விதிக்கும் தடையை விட நுகர்வோரின் இந்தத் தீர்மானமே வலுவான செய்தியை அமெரிக்காவிற்கு உணர்த்தும் என அவர் தெரிவித்துள்ளார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.