முன்னாள் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நெய்ட் எர்ஸ்கைன்-ஸ்மித் டொராண்டோ நகரசபை உறுப்பினராகப் போட்டியிடுவதற்காகத் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
வழக்கறிஞராக இருந்து அரசியல்வாதியான 42 வயதான எர்ஸ்கைன்-ஸ்மித், ‘பீச்சஸ்-ஈஸ்ட் யார்க்’ தொகுதி நகரசபை இடத்திற்கு போட்டியிடுவதற்காகக் கடந்த புதன்கிழமை காலை டொராண்டோ சிட்டி ஹாலில் ஆவணங்களைச் சமர்ப்பித்தார்.
2015-ஆம் ஆண்டு இதே தொகுதியிலிருந்து கூட்டாட்சி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், வீடமைப்பு அமைச்சராகக் குறுகிய காலம் பணியாற்றினார். மே மாதம் பிரதமர் மார்க் கார்னி அமைச்சரவையை மாற்றியமைத்தபோது இவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
புதன்கிழமை சிட்டி ஹாலில் செய்தியாளர்களிடம் பேசிய எர்ஸ்கைன்-ஸ்மித், டொராண்டோ மேயர் ஒலிவியா சோ தன்னை தேர்தலில் போட்டியிடுமாறு ஊக்குவித்ததாகத் தெரிவித்தார்.
ஒட்டாவாவில் வீடமைப்புத் துறையில் பணியாற்றிய காலத்தில் தாமும் மேயர் ஒலிவியா சோவும் மிக நெருக்கமாகப் பணியாற்றியதாக அவர் குறிப்பிட்டார். “நாங்கள் இருவரும் இணைந்து நமது நகரத்திற்காகப் பல நன்மைகளைச் செய்துள்ளோம். இணைந்து செயல்படுவதற்கான நல்ல வாய்ப்பு மீண்டும் கிடைத்துள்ளது. மேயர் சோவுடன் இணைந்து எனது தொகுதி மற்றும் நகரத்தின் வளர்ச்சிக்காகப் பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக மாகாண அரசியலில் கவனம் செலுத்திய எர்ஸ்கைன்-ஸ்மித், ‘ஸ்கார்பரோ சவுத்வெஸ்ட்’ இடைத்தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட முயன்றார். ஆனால் அந்த உட்கட்சித் தேர்தலில் தோல்வியடைந்தார். அதை எதிர்த்து அவர் செய்த மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.