சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை கலைப்பதாக அமெரிக்கா சூளுரைத்துள்ள நிலையில், அந்த நீதிமன்றத்திற்கான கனடாவின் ஆதரவு மிகவும் உறுதியானது என கனடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
எனினும், வின்னிபெக்கில் பிறந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கிம்பர்லி புரோஸ்ட் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தடைகளை விதித்துள்ளமை குறித்து தனது அரசாங்கம் பகிரங்கமாக எவ்வித விமர்சனத்தையும் தெரிவிக்காதது ஏன் என்பது குறித்து பிரதமர் புதன்கிழமை விளக்கம் அளிக்கவில்லை.
டொரண்டோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கார்னி, தனது கடன் அட்டைகளைப் பயன்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்திய அமெரிக்கத் தடைகளை நீக்கக் கோரி நியூயோர்க் நீதிமன்றத்தை அணுகியுள்ள நீதிபதிக்கு கனடா தேவையான ஆதரவை வழங்கும் என கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் ஈடுபட்ட வழக்கு தொடர்பில் பணியாற்றியதற்காக, கடந்த ஆகஸ்ட் மாதம் நீதிபதி புரோஸ்ட் மீது டிரம்ப் தடை விதித்தார். பிரான்ஸ் இந்த நடவடிக்கையைக் கண்டித்த போதிலும், கனடா அரசாங்கம் இது குறித்து எவ்வித விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை.
இதனிடையே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தைக் “கலைப்பதாக” சபதம் செய்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இதுவரை எந்தவொரு அமெரிக்கரையும் முறைப்படி விசாரிக்கவோ அல்லது குற்றம் சுமத்தவோ செய்யாத அந்த நீதிமன்றத்திலிருந்து வெளியேறுமாறு தனது நட்பு நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.
உலகில் ஆபத்துகள் அதிகரித்து வரும் இக்காலக்கட்டத்தில் சர்வதேச சட்டத்திற்கு ஒட்டாவா அளிக்கும் முக்கியத்துவத்தை கனடாவின் பல்வேறு ராஜதந்திர நியமனங்கள் வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்ட கார்னி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றும் வலியுறுத்தினார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.