Reading Time: < 1 minute

சமூக வலைத்தளங்களில் மணிக்கணக்கில் நேரத்தை வீணடிப்பதையும், முடிவில்லாமல் செய்திகளை ‘ஸ்க்ரோல்’ செய்யும் பழக்கத்தையும் தடுக்கும் வகையில், கனடாவைச் சேர்ந்த 21 வயது மாணவர் ஒருவர் புதிய சமூக ஊடகச் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார்.

Tamil Business Directory

கனடாவின் கியூபெக் மாகாணம், பின்கோர்ட் பகுதியைச் சேர்ந்த அலெக்சிஸ் போஸ் என்ற மாணவர், கடந்த மே மாதம் ‘லைவியோ’ என்ற செயலியை அறிமுகப்படுத்தினார்.

இச்செயலியில் விளம்பரங்களோ அல்லது பயனர்களைத் தொடர்ந்து பார்க்கத் தூண்டும் அல்காரிதம் முறையோ கிடையாது. நண்பர்களின் பதிவுகள் அனைத்தையும் பார்த்து முடித்ததும், “நீங்கள் அனைத்தையும் பார்த்துவிட்டீர்கள், மீதமுள்ளவை ஆஃப்லைனில் உள்ளன” என்ற செய்தி திரையில் தோன்றி செயலி நின்றுவிடும்.

சமூக வலைத்தளங்களுக்குத் தான் அடிமையாகியிருந்ததை உணர்ந்த மோன்ட்ரியல் பல்கலைக்கழக மாணவரான அலெக்சிஸ் போஸ், அதிலிருந்து விடுபட ஆரோக்கியமான செயலி ஒன்றை உருவாக்க விரும்பினார்.

இதற்காக மென்பொருள் பொறியாளர்களை அணுகியபோது அவர்கள் 30,000 முதல் 50,000 டொலர் வரை கட்டணம் கேட்டதால், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தானே குறியீட்டு முறையைக் கற்றுக்கொண்டு இச்செயலியை உருவாக்கியுள்ளார்.

வணிகவியல் பயிலும் இம்மாணவர், இச்செயலியைப் பணத்திற்காக உருவாக்கவில்லை என்று தெரிவிக்கிறார். பயனர்கள் அனைத்துப் பதிவுகளையும் பார்த்த பிறகு, போனை மூடி வைத்துவிட்டுத் தங்களது அன்றாட பணிகளைக் கவனிக்க வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

தற்போதைய பெரும்பாலான சமூக வலைத்தளங்கள் மக்களிடையே தொடர்பை ஏற்படுத்துவதை விட்டுவிட்டு, லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்குகின்றன.

பயனர்களைப் அதிக நேரம் தளத்திலேயே வைத்திருக்கச் செய்வதே அவற்றின் மென்பொருள்களின் முக்கிய வேலையாக உள்ளது எனத் தொழில்நுட்ப பகுப்பாய்வாளர் கார்மி லெவி சுட்டிக்காட்டியுள்ளார்.

இளைஞர்கள் நாளொன்றுக்கு 2 மணி நேரத்திற்கு மேல் திரைகளைப் பயன்படுத்தக் கூடாது எனப் பரிந்துரைக்கப்பட்டாலும், 40 சதவீதமான இளைஞர்கள் அதனைப் பின்பற்றுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.