ஒன்ராறியோ மாகாணத்தில் கடந்த செப்டம்பர் 9 ஆம் திகதிக்குப் பின்னர் மிகக் குறைந்தளவாக 170 கொரோனா தொற்று நோயாளர்கள் நேற்று பதிவாகினர். அத்துடன், ஒரு கொரோனா மரணமும் நேற்று பதிவானது.
நேற்று 12,949 சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில் தொற்று நேர்மறை வீதம் 1.3 ஆக பதிவாகியுள்ளது. இது ஒரு வாரத்துக்கு முன்னர் 1.8 ஆக இருந்தது.
வாட்டர்லூ பிராந்தியத்தில் 34, ரொரண்டோவில் 27, கிரே ப்ரூஸில் 18 மற்றும் ஹாலிபர்டன், கவர்தா, பைன் ரிட்ஜ் மாவட்ட சுகாதார பிரிவுகளில் 13 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர்.
ஒன்ராறியோவில் தொற்று நோயாளர் தொகை தொடர்ந்து குறைந்துவரும் நிலையில் கடந்த 7 நாட்கள் தினசரி சராசரி தொற்று நோயாளர் தொகை 233 ஆக உள்ளது. செப்டம்பர் 15 -க்குப் பின்னர் மிகக் குறைந்த ஒருவார சராசரி இதுவாகும்.
மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை 213 புதிய தொற்று நோயாளர்களும் ஒன்பது இறப்புகளும் பதிவாகின.
இதேவேளை, மாகாணத்தில் தற்போது அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 228 பேர் உள்ளனர். அவர்களில் 157 பேர் செயற்கைச் சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சை பெறுகின்றனர்.
நேற்று வரையான கடந்த 24 மணி நேர த்தில் 144,795 கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்பட்டன.
ஒன்ராறியோவில் வசிப்பவர்களில் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 77.5 வீதம் பேர் குறைந்தது ஒரு தடுப்பூசியை இதுவரை பெற்றுள்ளனர். 44 வீதம் பேர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.
மாகாணத்தில் 12 முதல் 17 வயதுடைய அனைவரும் கோவிட் 19 தடுப்பூசி பெற இப்போது தகுதிபெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.