700 இந்திய மாணவர்களை ஏமாற்றி, அவர்கள் நாடுகடத்தப்படும் நிலைமையை ஏற்படுத்திய ஏஜண்ட், கடந்த மாதம் திருட்டுத்தனமாக கனடாவுக்குள் நுழையமுயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் ஜலந்தரில் அமைந்துள்ள, Brijesh Mishra என்பவர் நடத்தும் Education Migration Services என்ற அமைப்பில், ஆளுக்கு 16 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலுத்தி கனடாவில் கல்வி கற்பதற்காக, கல்வி விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார்கள் 700 மாணவர்கள்.
அவர்கள் படிப்பை முடித்து நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பிக்கும்போதுதான் தாங்கள் அனைவரும் ஏமாற்றப்பட்ட விடயம் அவர்களுக்குத் தெரியவந்துள்ளது.
அவர்களுடைய அனுமதி ஆஃபர் கடிதங்கள் (admission offer letters) போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் நாடுகடத்தப்பட இருப்பதாக கனேடிய எல்லை பாதுகாப்பு ஏஜன்சி கடிதங்கள் அனுப்பிய விடயம் இரு நாடுகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்படி இரு நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்திய Brijesh Mishra, விடயம் வெளியானதும், அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
அவர் எங்கே இருக்கிறார் என யாருக்கும் தெரியாத நிலையில், திருட்டுத்தனமாக கடந்த மாதம் கனடாவுக்குள்ளேயே நுழையமுயன்றுள்ளார் Brijesh Mishra. அப்போது கனேடிய பொலிசார் அவரைக் கைது செய்தனர்.
Brijesh Mishraவிடம் பொலிசார் விசாரணை நடத்தியபோது, மற்றுமொரு அதிரவைக்கும் தகவல் கிடைத்தது. ஆம், இந்திய மாணவர்களை கனடாவுக்கு அனுப்ப இந்தியாவில் மோசடி செய்த அவர், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள சர்ரேயில் வாழ்ந்துவந்துள்ளார்.
2019இல் அவருடைய விசா ரத்துசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, Brijesh Mishra சட்டவிரோதமாக கனடாவில் வாழ்ந்துவந்துள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.