பிராம்ப்டன் பகுதியில் சமூக ஊடகங்கள் மூலம் வீடுகளை வாடகைக்கு விடுவதாக விளம்பரம் செய்து, பலரிடமிருந்து 60,000 டொலருக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் இந்திய பெண் ஒருவரை பீல் பிராந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பீல் பிராந்திய பொலிஸின் 22ஆம் பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து, பிராம்ப்டனைச் சேர்ந்த 27 வயதான சவ்ரீத் கவுர் (Savreet Kaur) என்பவர் ஜூலை 13ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
2025ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2026ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில், அடித்தளக் குடியிருப்புகள் உள்ளிட்ட பல வீடுகளை வாடகைக்கு விடுவதாக குற்றஞ்சாட்டப்பட்டவர் பல்வேறு சமூக ஊடகத் தளங்களில் விளம்பரங்களை வெளியிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த விளம்பரங்களை நம்பியவர்கள் வாடகை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, முதல் மற்றும் கடைசி மாதங்களுக்கான வாடகைப் பணத்தை முன்பணமாக அனுப்பியுள்ளனர்.
பின்னர், தங்களது உடைமைகளுடன் சம்பந்தப்பட்ட வீடுகளுக்குச் சென்றபோது, அந்தக் குடியிருப்புகள் வாடகைக்கு கிடைக்கவில்லை என்பதை பாதிக்கப்பட்டவர்கள் அறிந்துள்ளனர். இவர்களில் பலர் ஏற்கனவே தங்களது முந்தைய வீடுகளிலிருந்து வெளியேறியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி தொடர்பாக இதுவரை 17 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த நிதி இழப்பு 60,000 டொலரைத் தாண்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட எவருக்கும் வாக்குறுதியளிக்கப்பட்ட குடியிருப்புகள் வழங்கப்படவில்லை என்பதுடன், செலுத்திய பணமும் திருப்பிக் கொடுக்கப்படவில்லை.
கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு எதிராக 5,000 டொலருக்கும் அதிகமான மோசடி தொடர்பில் 38 குற்றச்சாட்டுகளும், பொலிஸாரின் விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாக ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளன.
அவர் பிணை விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டு, ஒன்ராறியோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சமூக ஊடகங்கள் மூலம் வாடகை வீடுகளைத் தேடும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பீல் பொலிஸார் எச்சரித்துள்ளனர். பணம் அனுப்புவதற்கு முன்னர் வீட்டை நேரில் பார்வையிடுவதுடன், வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகை ஒப்பந்தத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விசாரணை தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் 905-453-2121 என்ற தொலைபேசி எண்ணின் 2233ஆம் இலக்க நீட்டிப்பில், 22ஆம் பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவினரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.




