Reading Time: < 1 minute

60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து ஒன்ராறியர்களுக்கும் மே மாத இறுதிக்குள் குறைந்தது ஒரு கோவிட் தடுப்பூசியை வழங்க முடியும் என டக் போர்ட் அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

தடுப்பூசி வழங்கும் இரண்டாம் கட்டத் திட்டம் ஏப்ரல் ஆரம்பிக்கப்பட்டு ஜூலை வரை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் சுமார் 90 இலட்சம் ஒன்ராறியர்களுக்கு முதல் தடுப்பூசியைப் போட முடியும் எனவும் மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.

60 முதல் 79 வயது வரையிலான ஒன்ராறியர்களுக்கு இரண்டாம் கட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும். இதன்படி சுமார் 25 இலட்சம் பேர் இக்காலப்பகுதிக்குள் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் ஒன்ராறியோ மாகாண அரசு தெரிவித்துள்ளது.

மாகாணத்தில் உள்ள முதியவர்களுக்கு பைசர்-பயோஎன்டெக் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளைப் போட திட்டமிடப்பட்டுள்ளது.

64 வயதிற்குட்பட்டவர்கள் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை அடுத்த வார தொடக்கத்தில் பெறத் தொடங்குவார்கள் எனவும் அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஜோன்சன்& ஜோன்சன் தடுப்பூசிக்கு ஹெல்த் கனடா வெள்ளிக்கிழமை அங்கீகாரம் அளித்தது. ஜோன்சன்& ஜோன்சன் ஒற்றைத் தடுப்பூசி கொரோனா வைரஸூக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை வெளிப்படுத்துவது நிரூபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.