இலங்கை, கனடா, இந்தியா உள்ளிட்ட 60 வர்த்தக நாடுகள் மற்றும் பொருளாதாரங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 முதல் 12.5 சதவீதம் வரையிலான புதிய சுங்கவரிகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் அறிவித்துள்ள இந்தச் சுங்கவரி நடவடிக்கை, 2026 ஜூலை 24ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. கட்டாயத் தொழிலாளர்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதியைத் தடுக்கத் தவறிய நாடுகளுக்கு எதிராக, அமெரிக்க வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 301இன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கை, கனடா, இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, அர்ஜென்டினா, பங்களாதேஷ், கம்போடியா, மெக்சிகோ மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட 17 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட பொருட்களுக்கு 10 சதவீத கூடுதல் சுங்கவரி விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா உள்ளிட்ட ஏனைய பல நாடுகள் மற்றும் பொருளாதாரங்களிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 12.5 சதவீத சுங்கவரி விதிக்கப்பட்டுள்ளது. சில மூலப்பொருட்கள், அமெரிக்காவில் போதுமான அளவில் உற்பத்தி செய்ய முடியாத பொருட்கள் மற்றும் அமெரிக்கப் பொருளாதாரத்தில் பரவலான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சில இறக்குமதிகளுக்கு விலக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் புதிய நடவடிக்கைக்கு ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன. ஜப்பான் அரசாங்கம் இந்தத் தீர்மானம் குறித்து ஆழ்ந்த வருத்தம் வெளியிட்டுள்ள நிலையில், அவுஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் டொன் ஃபாரெல், தமது நாட்டின் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 12.5 சதவீத சுங்கவரி முற்றிலும் நியாயமற்றது என விமர்சித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம், பிரேசில் மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளும் அமெரிக்காவின் சுங்கவரி நடவடிக்கையின் அடிப்படை குறித்து கேள்வி எழுப்பியுள்ளன. சில நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடரவுள்ளதாகத் தெரிவித்துள்ளதுடன், உலகளாவிய வர்த்தகத்தில் இந்த நடவடிக்கை மேலும் நிச்சயமற்ற சூழலை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.




