Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா தொற்று நோய் தீவிரமடைந்துவரும் நிலையில் 6 மாகாணங்களில் நேற்று புதன்கிழமை முன்னொருபோதும் இல்லாத அளவு அதிகளவு தொற்று நோயாளர்கள் பதிவாகினர்.

ஒமிக்ரோன் திரிபு தீவிரத்தை அடுத்து பல மாகாணங்கள் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி வரும் நிலையில் 6 மாகாணங்களில் தொற்று நோய் சாதனை மட்டத்துக்கு அதிகரித்துள்ளது.

நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணங்களான ஒன்ராறியோ, கியூபெக் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் மிக அதிகளவு தொற்று நோயாளர்கள் நேற்று உறுதிப்படுத்தப்பட்டனர்.

கியூபெக்கில் நேற்று 13,000க்கும் அதிகமான புதிய தொற்று நோயாளர்கள் பதிவாகினர். ஒன்ராறியோவில் 10,436 மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் 2,944 தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர்.

மனிடோபா, அல்பர்ட்டா, நியூபவுண்ட்லாண்ட் மற்றும் லாப்ரடோர் ஆகிய பகுதிகளிலும் கொரோனா தொற்று நோயாளர் தொகையில் புதிய சாதனை மட்ட அதிகரிப்பு பதிவானது.

மனிடோபாவில்நேற்று 947 புதிய தொற்று நோயாளர்கள் பதிவாகினர். இதற்கு முன்னர் ஒரு நாளில் 825 தொற்று நோயாளர்கள் பதிவானதே மாகாணத்தில் பதிவான அதிகபட்ச தொகையாக இருந்தது.

தொற்று நோய் தீவரமடைந்து வரும் நிலையில் கிறிஸ்மஸ் விடுமுறைக்குப் பின்னர் பாடசாலைகளை முழுமையாக மீளத் திறக்கும் நடவடிக்கையை தாமதப்படுத்துவதாக பிரிட்டிஷ் கொலம்பியா அறிவித்தது.

விடுமுறைக்குப் பின்னர் இணையவழியில் கற்றல் – கற்பித்தல் நடவடிக்கை இடம்பெறுமென நியூபவுண்ட்லாண்ட் மற்றும் லாப்ரடர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.