கனடாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட மூத்த இராணுவ அதிகாரி ஒருவர், பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக 6 மில்லியன் டொலர் இழப்பீடு கேட்டு வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
குறித்த வழக்கில், மேஜர்-ஜெனரல் டேனி ஃபோர்டின் தமது சக இராணுவ அதிகாரிகள் மற்றும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உட்பட 16 நபர்களின் பெயர்களை இணைத்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தமக்கு இழப்பீடாக 6 மில்லியன் கனேடிய டொலர்கள் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
தம்மீதான குற்றச்சாட்டுகளை அதிகாரிகள் தரப்பு முறையாக விசாரிக்கவில்லை எனவும் அவர் அந்த வழக்கில் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், பொதுமக்களை எதிர்கொள்ள முடியாத நெருக்கடிக்கு அவர் தள்ளப்பட்டதையும், இப்படியான ஒரு நெருக்கடியை எதிர்கொள்ள எந்த முகாந்திரமும் இருந்ததில்லை எனவும் அவரது சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
1988ல் இராணுவ கல்லூரில் பணியாற்றியபோது நடந்ததாக கூறப்படும் பலாத்கார குற்றச்சாட்டுகள் திடீரென்று முன்வைக்கப்பட்ட நிலையில், 2021 மே மாதம் கொரோனா தடுப்பூசி விநியோக தலைமை பொறுப்பில் இருந்து மேஜர்-ஜெனரல் டேனி ஃபோர்டின் அதிரடியாக நீக்கப்பட்டார்.
அவர் மீது ஆகஸ்ட் 2021ல் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஆனால் கியூபெக் உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்ட நிலையில், கடந்த டிசம்பர் மாதம் குற்றச்சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.