Reading Time: < 1 minute

5 முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கு, ஃபைஸர் கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பயன்படுத்த கனடா அங்கீகாரம் அளித்துள்ளது.

16 முதல் 25 வயதுடையவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் பதிவுசெய்யப்பட்ட பாதுகாப்பு மற்றும் செயற்திறன் 5 முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கும் இருக்கும் என ஃபைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கனடாவில் இந்த வயதினருக்கு அங்கீகரிக்கப்பட்ட முதல் கொவிட்-19 தடுப்பூசி இதுவாகும்.

ஐந்து முதல் 11 வயதுள்ள சிறுவர்களுக்கு தலா 10 மைக்ரோகிராம் இரண்டு டோஸ்கள் தேவைப்படும்.

முன்பு, 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த தகுதியுடையவர்கள்hக இருந்தனர்.

நோய்த்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு, இரண்டு டோஸ்களையும் எட்டு வார இடைவெளியில் பரிந்துரைக்கிறது.

இதுகுறித்து தேசிய கனேடிய சுகாதார சபையின் மூத்த மருத்துவ ஆலோசகர் டாக்டர் சுப்ரியா ஷர்மா கூறுகையில்,
‘பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி. கனேடியர்களைப் பாதுகாக்க இது மற்றொரு கருவியை வழங்குகிறது. மேலும், இது சிறுவர்களின் வாழ்க்கையின் இயல்புநிலையை மீட்டெடுக்க உதவும்’ என கூறினார்.

கனடாவில் ஞாயிற்றுக்கிழமை இளம் சிறுவர்களுக்கான டோஸ் ஏற்றுமதி தொடங்கும் என்று பொது சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சர் ஃபிலோமினா டாஸ்ஸி வெள்ளிக்கிழமை அறிவித்தார். முன்பதிவு செய்யப்பட்ட 2.9 மில்லியன் டோஸ்கள் அனைத்தும் வார இறுதிக்குள் பெறப்படும்.

நாட்டில் உள்ள அனைத்து தகுதியான சிறுவர்களுக்கும் முதல் டோஸ் வழங்க இந்த தடுப்பூசி போதுமானது என்று அவர் கூறினார்.

ஃபைசர் கொவிட்-19 தடுப்பூசிக்கு 14 நாட்களுக்கு முன்போ அல்லது அதற்குப் பின்னரோ, காய்ச்சல் தடுப்பூசி போன்ற மற்றொரு தடுப்பூசியை சிறுவர்கள் பெறக்கூடாது என்று நோய்த்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு பரிந்துரைக்கிறது.