கனடா முழுவதும் 5 முதல் 11 வயது வரையான சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படலாம் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வயதுப் பிரிவினருக்கு பைசர் தடுப்பூசி போட ஒப்புதல் கோரி மருத்து தயாரிப்பு நிறுவனத்தினர் ஹெல்த் கனடாவிடம் விரைவில் விண்ணப்பிக்கவுள்ளனர்.
ஹெல்த் கனடா இதற்கு அனுமதி அளித்தால் நாடு முழுவதும் 05 முதல் 11 வயதுக்குட்பட்ட சுமார் 30 இலட்சம் சிறுவர்கள் பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும்.
எங்கள் அடுத்த இலக்கு சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதே. இதன் மூலம் சமூகத்தில் முடிந்தவரை நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களை அதிகரிப்பதுதான் எங்கள் எண்ணம் என மொன்றியல் சிறுவர் மருத்துவமனையின் குழந்தை தொற்று நோய் நிபுணர் டாக்டர் ஏர்ல் ரூபின் தெரிவித்துள்ளார்.
கனடாவில் தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி பெறத் தகுதிபெற்றுள்ளனர்.
இந்நிலையில் அடுத்த கட்டமாக 05 முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கான தடுப்பூசி குறித்து ஆய்வுகள் இடம்பெற்று வந்த நிலையிலேயே தற்போது இந்த வயதினருக்கு பைசர் தடுப்பூசி போடத் தீா்மானிக்கப்பட்டு ஹெல்த் கனடாவின் ஒப்புதலுக்காக விரைவில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
5 முதல் 11 வயதுப் பிரிவினருக்கு பெரியவர்களுக்கு வழங்கு தடுப்பூசியின் மூன்றில் ஒரு பங்கை வழங்கி பரிசோதனை செய்ததில் அவா்கள் பாதுகாப்பான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.