Reading Time: < 1 minute

கனடாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமான ஒன்ராறியோவில் கொவிட் தொற்று நோய் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. கடந்த மே மாதத்துக்குப் பின்னர் மாகாணத்தில் அதிகளவாக 944 புதிய தொற்று நோயாளர்கள் நேற்று பதிவானதாக சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை 807, வியாழக்கிழமை 865 தொற்று நோயாளர் பதிவான நிலையில் நேற்று ஆயிரத்தை நெருங்கிய தொற்று நோயாளர்கள் பதிவாகியமை தொற்று நோயின் நான்காம் அலை குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த மே 30 ஆம் திகதி ஒரு நாளில் 944 தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். அதனைத் தொடந்து 3 மாதங்களுக்குப் பின்னர் அதிக தொற்று நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கடந்த 7 நாட்களில் மாகாணத்தில் பதிவான சாரசரி தினசரி தொற்று நோயாளர் தொகை 747 ஆக உள்ளது. இந்த தினசரி சராசரி கடந்த வாரம் 686 ஆக இருந்தது.

சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட 944புதிய தொற்று நோயாளர்களில் 736 பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மற்றும் ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். 208 பேர் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்கள்.

இதேவேளை, மாகாணத்தில் நேற்று 09 கொரோனா மரணங்கள் பதிவாகின. இவற்றுடன் மொத்த இறப்பு எண்ணிக்கை 9,545 ஆக அதிகரித்துள்ளது. நேற்று பதிவான ஒன்பது இறப்புகளில் ஐந்து இரண்டு மாதங்களுக்கு முன்பே நிகழ்ந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தரவு சேகரிப்பின் ஒரு பகுதியாக இந்த இறப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், ஒன்ராறியோவில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த தொற்று நோயாளர் எண்ணிக்கை 568,822 ஆக உள்ளது.

நேற்று அதிகளவக 181 தொற்று நோயாளர்கள் கிரேட்டர் ரொரண்டோ பகுதியில் பதிவாகினர். பீல் பிராந்தியத்தில் 118 , யோர்க் பிராந்தியத்தில் 112, டர்ஹாம் பிராந்தியத்தில் 28, வின்ட்சர்-எசெக்ஸில் 113, ஹாமில்டனில் 92, சிம்கோ மஸ்கோகாவில் 51, ஒட்டாவாவில் 39, நயாகரா பகுதியில் 3, வாட்டர்லூ பகுதியில் 30 புதிய தொற்று நோயாளர்களும் பதிவாகினர்.

ஏனைய அனைத்துப் பகுதிகளிலும் 30 க்கும் குறைவான புதிய தொற்று நோயாளர்களே உறுதிப்படுத்தப்பட்டனர்.

சமீபத்திய மாதரிக் கணிப்பீடு ஒன்ராறியோ தொற்றுநோயின் நான்காவது அலையை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கிறது. அத்துடன், கட்டுப்பாடுகளைப் பேணாவிட்டால் தினசரி தொற்று நோயாளர் தொகை ஒக்டோபருக்குள் 9,000 ஐ எட்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.