Reading Time: < 1 minute

கனடா, 2024 -2026ஆம் ஆண்டுகளுக்கான புலம்பெயர்தல் திட்டத்தை வெளியிட்டுள்ளது. நேற்று மதியம் இந்த திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

கனடா, 2024ஆம் ஆண்டில் 485,000 புதிய புலம்பெயர்ந்தோரை வரவேற்க உள்ளது. 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில், 500,000 புதிய புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வரவேற்கப்பட இருக்கிறார்கள்.

2024இல், பொருளாதார பிரிவின் கீழ் 281,135 புலம்பெயர்ந்தோர் வரவேற்கப்பட இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை 2026இல் 301,250ஆக அதிகரிக்கப்பட உள்ளது.

குடும்ப பிரிவில், 2024இல் 114,000 புலம்பெயர்ந்தோர் வரவேற்கப்பட இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை 2026இல் 118,000ஆக அதிகரிக்கப்பட உள்ளது.

அகதிகள், பாதுகாக்கப்பட்ட நபர்கள் முதலான மனிதநேய பிரிவின் கீழ், 2024இல் 89,865 பேர் வரவேற்கப்பட இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை 2026இல் 80,832ஆக குறைக்கப்பட உள்ளது.

தற்போது ஏன் இந்த திட்டம் வெளியிடப்பட்டுள்ளது என்றால், அதாவது, ஒவ்வொரு ஆண்டும், அது தேர்தல் நடைபெறாத ஆண்டாக இருக்கும் பட்சத்தில், கனடாவின் புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், பெடரல் அரசு, நவம்பர் மாதம் 1ஆம் திகதி தனது வருடாந்திர புலம்பெயர்தல் திட்டத்தை கண்டிப்பாக வெளியிட்டாக வேண்டும் என்பதாலேயே, தற்போது இந்த புலம்பெயர்தல் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.