2021 ஆம் ஆண்டில் 401,000 வெளிநாட்டினருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கும் இலக்கை கனடா அடைந்துள்ளது.
தொற்று நோய் நெருக்கடி காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரும் புதிய குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் ஏற்கனவே கனடா வந்து விதிவிட உரிமை கோரியுள்ளவர்கள் மீது அரசு கவனம் செலுத்தியது. இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை கனடா அடைந்துள்ளது என கனடிய குடிவரவு அமைச்சர் சீன் ஃப்ரேசர் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
கனடா அதன் பொருளாதார வளர்ச்சிக்கு குடியேற்றத்தை நம்பியுள்ளது. எனினும் தொற்று நோய் நெருக்கடி காரணமாக எல்லைகள் மூடப்பட்டதால் 2000 -ஆம் ஆண்டில் கனடாவுக்கு வந்த குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை 45% குறைந்து. அந்த ஆண்டில் கனடா வந்த குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை 185,000 ஆக வீழ்ச்சியடைந்தது.
இந்நிலையில் இவ்வாண்டு 401,000 வெளிநாட்டினருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கும் இலக்கை நிர்ணயித்திருந்த நிலையில் அந்த இலக்கை அடைந்துள்ளது என ஃப்ரேசர் கூறினார்.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கம் 2015 இல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கனேடிய பொருளாதார வளர்ச்சிக்கு குடியேற்றத்தை நம்பியுள்ளது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 1% அளவுக்கு ஒவ்வொரு ஆண்டும் புதிய குடியேற்றவாசிகளை வரவேற்றும் திட்டம் அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த இலக்கை அடையும் நோக்குடன் 2022 ஆம் ஆண்டு 411,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதேவேளை, தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியிலும் கனடாவின் பொருளாதாரம் பாரியளவில் தளம்பலின்றி நவம்பரில் தொடர்ந்து ஆறாவது மாதமாக சீரான வளர்ச்சிப் போக்கில் உள்ளது.
அத்துடன், தொற்றுநோய்க்கு முந்தைய பொருளதார நிலையை நோக்கி கனடா தொடர்ந்து முன்னேறக்கூடும் என்பதற்கான சமிக்ஞைகள் தெரிவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.