Reading Time: < 1 minute

இரண்டு ஆண்டுகளின் முன்னர் ஹமில்ட்டனைச் சேர்ந்த 33 வயது நபர் ஒருவர் தனது காரில் இருந்த போது மிக அருகில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த சந்தேக நபர் தற்போது அமெரிக்காவில் வைத்து அந்த நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இரவு,Leonard Pinnock என்பவர் Dufferin Street மற்றும் Bowie Avenue பகுதியில் தனது நண்பரைக் கொண்டுசென்று விட்டுவிட்டு தனது காரில் காத்திருந்த வேளையில், அவரை அணுகிய இரண்டுபேர் குறைந்தது ஐந்து துப்பாக்கிச் சூடுகளை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றதாக ரொரன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஹமில்ட்டனில் வசித்துவந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்ட நிலையில், இரண்டு மாதங்களின் பின்னர் சம்பவம் இடம்பெற்ற அந்தப் பகுதியில் உள்ள வீட்டு உரிமையார் ஒருவர் இந்தக் கொலையில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளில் ஒன்றை அங்கே கண்டெடுத்து கையாண்ட போது தவறுதலாக அது வெடித்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த ரொரன்ரோ காவல்துறையினர், சந்தேக நபர்களில் ஒருவர் Akil Whyte என்ற அடையாளத்தினை 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியிட்டனர். இரண்டாவது சந்தேக நபரின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

இவ்வாறான நிலையில் குறித்த அந்த முதலாவது சந்தேக நபர் அமெரிக்காவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதான தகவலை ரொரன்ரோ காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

அவர் அமெரிக்க அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை கனடாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.