இருபது மில்லியன் டொலர் பெருமதியான தங்க மற்றும் ஏனைய பெறுமதி வாய்ந்த பொருட்கள் களவாடப்பட்ட சம்பவத்தின் போது விமான நிலையத்திலிருந்து உள்ளக தகவல்கள் பகிரப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நிபுணர் ஒருவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டி உள்ளார்.
வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் சட்ட மற்றும் சமூகவியல் பேராசிரியர் பில் பாயல் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தின் உள்ளக தகவல்கள் இன்றி இவ்வளவு பாரிய பொருட்களை கொள்ளை அடித்திருக்க முடியாது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த பொருட்கள் எந்த நேரத்தில் எங்கிருந்து வந்தது எந்த நேரத்தில் எந்த இடத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது போன்ற துல்லியமான விபரங்களை அறிந்தவர்களே இந்த தங்க கடத்தலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இந்த கொள்ளை சம்பவமானது திடீரென அந்த நேரத்தில் இடம் பெற்றது அல்ல என அவர் தெரிவிக்கின்றார்.
திட்டமிட்ட அடிப்படையில் தகவல்கள் திரட்டப்பட்டு நிதானமாக இந்த கொள்ளை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த பெறுமதி மிக்க பொருட்கள் எவ்வாறு களவாடப்பட்டன என்பது பற்றியோ சந்தேக நபர்கள் பற்றியோ போலீசார் இதுவரையில் எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.
இந்த கொள்ளை சம்பவத்திற்கும் பயணிகளின் பாதுகாப்பிற்கும் தொடர்பு கிடையாது எனவும் பயணிகள் பியர்சன் விமான நிலையத்திற்கு வருவதற்கு அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையத்தில் சுங்கப்பிரிவு அல்லது வேறு ஏதேனும் ஒரு பிரிவில் பணியாற்றும் நபர்களினால் தகவல்கள் வழங்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
களவாடப்பட்ட தங்கம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் கனடாவை விட்டு கொண்டு செல்லப்பட்டதா என்பது பற்றிய தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.