கனடாவில் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் தொகை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
கியூபெக்கில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 31 மரணங்கள் பதிவானதையடுத்து இறப்புக்களின் எண்ணிக்கை எண்ணிக்கை 20,016 ஆக உயர்ந்துள்ளது.
கனடா முழுவதும் தற்போது 52,000-க்கும் மேற்பட்டவர்கள் செயலில் உள்ள தொற்று நோயுடன் போராடி வருகின்றனர். நாட்டில் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட ஏறத்தாழ 703,000 பேர் குணமடைந்துள்ளனர்.
ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களே அதிக இறப்புகளைப் பதிவு செய்துள்ளன, இரு மாகாணங்களிலும் மட்டும் கிட்டத்தட்ட 16,000 இறப்புகள் பதிவாகியுள்ளன. ஒன்ராறியோவில் இதுவரை 6,180க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், கியூபெக்கில் 9,700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜனவரி 27-ஆம் திகதி ரொராண்டோவில் முதல் கொரோனா தொற்று நோயாளி அடையாளம் காணப்பட்டார். முதல் தொற்று நோயாளி உறுதி செய்யப்பட்டு ஆறு வாரங்களுக்குப் பின்னர் 2020 மார்ச் 9-ஆம் திகதி முதல் கொரோனா மரணம் கனடாவில் பதிவானது.
இதேவேளை, தற்போது கனடாவில் தினசரி தொற்று நோயாளர் தொகை ஒப்பீட்டளவில் சிறிய சரிவைச் சந்தித்து வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் எண்ணிக்கை குறைந்து வருகின்ற போதிலும், தொற்றுநோயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரவேண்டுமானால் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து பேணப்பட வேண்டும் என கனடா தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, வெளிநாட்டினர் கனடாவுக்குள் நுழைய கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கரீபியன், மெக்ஸிக்கோ நாடுகளுக்கான பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஏர் கனடா, வெஸ்ட்ஜெட், சன்விங் மற்றும் ஏர் டிரான்சாட் ஆகிய விமான சேவை நிறுவனங்கள் மெக்ஸிகோ மற்றும் கரீபியனுக்கான சேவையை ஏப்ரல் 30 வரை நிறுத்திவைக்க ஞாயிற்றுக்கிழமை (Jan 31, 2021) ஒப்புக் கொண்டன.
கனடா வரும் அனைத்து சர்வதேச பயணிகள் விமானங்களும் வன்கூவர், ரொராண்டோ, கல்கரி மற்றும் மொன்றியல் ஆகிய விமான நிலையங்களில் மட்டுமே தரையிறங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கனடாவுக்கு வரும் அனைத்து விமானப் பயணிகளும் மூன்று இரவுகள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விடுதிகளில் கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்தவாறு பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
இதில் தொற்று இல்லை என நிரூபிக்கப்பட்டால் தொடர்ந்து 14 நாட்கள் கடுமையான தனிமைப்படுத்தலை நிறைவு செய்த பின்னரே அவர்கள் நாட்டுக்குள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.