Reading Time: < 1 minute

கொரோனா வைரஸ் தொற்று நோயை அடுத்து அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக மூடப்பட்டிருந்த எல்லைகளை 20 மாதங்களின் பின்னர் அமெரிக்கா இன்று திங்கட்கிழமை திறக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரத்தில் இருந்தபோது மூடப்பட்ட எல்லை, தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தால் திறக்கப்படுகிறது.

இந்தத் தடை கனடா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளடங்களாலாக சா்வதேச நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் அல்லாத குடிமக்கள் நாட்டுக்குள் நுழைவதை பாதித்தது. அத்தடையால் பல குடும்பங்கள் பிரிந்திருக்க நேர்ந்ததுடன், சுற்றுலாப் பயணமும் முடக்கியது.

இந்நிலையில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கான கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்பட்டு சர்வதேச பயணிகள் இன்று முதல் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் அதிகளவான சர்வதேச பயணிகள் அடுத்த சில நாட்களுக்கு அமெரிக்காவை நோக்கிப் படையெடுப்பார்கள் என விமான நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

எல்லையை அமெரிக்கா மீண்டும் திறந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. விமானப் பயணங்களுக்கான முன்பதிவுகள் நம்ப முடியாதளவுக்கு அதிகரித்துள்ளன என பாரிஸை தளமாகக் கொண்ட பயண நிறுவனமான ஜெட்செட் வோயேஜஸின் தலைவர் ஜெரோம் தோமன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவலைத் தடுக்கும் முயற்சியாக 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு அமெரிக்க எல்லைகள் முதலில் மூடப்பட்டன. பின்னர் மற்ற நாடுகளுக்கும் கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டன.

இதனால் பிரித்தானியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள், சீனா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஈரான் மற்றும் பிரேசில் உள்ளிட்ட பல சர்வதேச நாடுகளிலும் இருந்த பெரும்பாலான அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது.

புதிய விதிகளின்படி வெளிநாட்டுப் பயணிகள் விமானத்தில் ஏற முன்னர் முன் தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும். அத்துடன், பயணத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட கொவிட் பரிசோதனை எதிர்மறை முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அமெரிக்காவுக்கு வருவோர் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.