ஒன்ராறியோ மாகாணத்தில் பச்சிளம் குழந்தையை தெருவில் கைவிட்டு தப்ப முயன்ற பெண் மீது பொலிசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
ஒன்ராறியோவின் Kitchener நகரத்திலேயே குறித்த சம்பவம் திங்களன்று அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் வெளியிட்ட தகவலில், திங்களன்று பகல் சுமார் 11.10 மணியளவில் பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து அழைப்பு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பெண் ஒருவர் டிக்சன் தெருவில் குடியிருப்பு ஒன்றின் முன்பாக, தெருவோரம் பச்சிளம் குழந்தை ஒன்றை கைவிட்டு, தப்ப முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார் மற்றும் மருத்துவ உதவிக்குழுவினர், குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர். குறித்த குழந்தையானது பிறந்து 2 மாதங்களேயானது எனவும், கிறிஸ்துமஸ் முடிந்த நிலையில் குளிர்காலத்தின் நடுவில் இப்படியான ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது உண்மையில் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளனர் அப்பகுதி மக்கள்.
தொடர்புடைய பெண்மணியை தடுத்து நிறுத்த முயன்ற வழிபோக்கர் மிரட்டப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அப்பகுதி மக்களில் ஒருவர் தொடர்புடைய பெண்மணியை அடையாளம் காட்டியுள்ளதாகவும், 32 வயதான குறித்த பெண்மணி கைது செய்யப்பட்டதாகவும், தொடர்ந்து பச்சிளம் குழந்தையை கைவிட்டதாக கூறி அவர் மீது வழக்குப்பதியப்பட்டதாகவும் வாட்டர்லூ பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், கைதான பெண்மணி உண்மையில் அந்த குழந்தையின் தாயார் தானா, அவருக்கு ஏதேனும் உளவியல் பாதிப்பு உள்ளதா என்பதில் பொலிசார் உறுதியான தகவல் ஏதும் வெளியிடவில்லை என்றே கூறப்படுகிறது.