1985 ஆம் ஆண்டு ஏர் இந்தியா விமானம் குண்டு வெடிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் இரு சந்தேக நபர்கள் கனடா நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
திங்களன்று (21) நியூ வெஸ்ட்மினிஸ்டரில் உள்ள நீதிமன்றத்தில், ஃபாக்ஸ் மற்றும் லோபஸ் இருவரும் இரண்டாம் நிலை கொலைக்கான குறைந்த குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
1985, ஜூன் 23 இல் கனடாவிலிருந்து லண்டன் வழியாக இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் ஐரிஷ் கடற்கரையில் வெடித்தது.
இந்தச் சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 329 பேரும் உயிரிழந்தனர்.
அவர்களில் பெரும்பாலோர் கனேடிய குடிமக்கள் இந்தியாவில் உறவினர்களைப் பார்க்க வந்தவர்கள் ஆவர்.
சீக்கிய மதத்தின் புனிதத் தலமான பஞ்சாப் மாநிலத்தின் பொற்கோவிலை 1984-ல் இந்தியா தாக்கியதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கனடாவில் வாழும் புலம்பெயர் சீக்கியர்களால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகள் – கனடாவின் கொடிய பயங்கரவாதத் தாக்குதலாகவே உள்ளது.
2000 ஆம் ஆண்டில், ரிபுதாமன் சிங் மாலிக் என்ற தொழிலதிபர் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த அஜய்ப் சிங் பக்ரி ஆகியோரை கொலை மற்றும் சதி உட்பட பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பொலிஸார் கைது செய்தனர்.
ஆனால், இருவரும் நீடித்த விசாரணைக்குப் பிறகு 2005 ஆம் ஆண்டு அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டனர்.
வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட சீக்கிய தொழிலதிபர் ரிபுதாமன் சிங் மாலிக் 2022 ஜூலை 14 அன்று பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் சுட்டுக் கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.