கொவிட் 19 தொற்று நோயை அடுத்து கடந்த 17 மாதங்களாக அத்தியாவசியமற்ற பணயங்களுக்காக மூடப்பட்டிருருந்த அமெரிக்காவுடனான எல்லையை கனடா நேற்று மீண்டும் திறந்தது.
இதனையடுத்து முழுமையாகத் தடுப்பூசி பெற்றுக்கொண்ட அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்க வதிவிட உரிமம் பெற்றவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இன்றி கனடாவுக்கான பயணத்தை ஆரம்பித்தனர்.
இந்நிலையில் கனடாவுடனான தனது எல்லையை அமெரிக்க விரைவில் திறக்க வேண்டும் என அமெரிக்க சட்டவாக்க சபை உறுப்பினர்கள் ஜோ பைடன் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.
கனேடிய நேரம் திங்கட்கிழமை அதிகாலை 12:01 மணி முதல் அமெரிக்க குடிமக்கள் எல்லை ஊடாக கனடா வர அனுமதிக்கப்பட்டனர்.
ஹெல்த் கனடாவால் அங்கீகரிக்கப்பட்ட கொவிட் -19 தடுப்பூசியைப் பெற்று இரண்டு வாரங்கள் கடந்தவர்களுக்கு மட்டுமே முதல் கட்டமாக கனடா வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஹெல்த் கனடாவால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியைப் பெறாதவர்கள் மற்றும் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று 14 நாட்கள் நிறைவடையதவர்கள் எல்லைகளில் வைத்துத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
அத்துடன், கனடாவால் அங்கீகரிக்கப்பட்ட பைசர்-பயோஎன்டெக், மொடர்னா, ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஜோன்சன் & ஜோன்சன் தடுப்பூசிகளைப் பெற்றவர்களுக்கே கனடாவுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டது.
இதேவேளை, அமெரிக்கா உடனான எல்லை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு செப்டம்பர் 07-ஆம் திகதி முதல் சர்வதேச நாடுகளில் இருந்து பயணிகள் கனடா வர அனுமதிக்கப்படுவார்கள் என கனேடிய மத்திய அரசு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.