16வது தமிழ் இணைய மாநாடு நேற்று டொராண்டோ பல்கலைக்கழகம் ஸ்கார்பாரோ (UTSC) வில் தொடங்கியது. மாறிவரும் தொழில்நுட்ப உலகில் மக்களுக்கு மிகவும் தேவையான ஒரு தொழில்நுட்ப மாநாடு, 350,000 தமிழ் மக்கள் வாழும் டொரோண்டோ மாநகரில் வெறும் 20 க்கும் குறைவான மக்களுடன் ஆரம்பித்து நடந்தது மிகவும் ஏமாற்றமே.
மாநாடு நடைபெறும் பல்கலைக்கழகத்துக்கு 10 நிமிட தொலைவில் தமிழ் மக்கள் கலந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் வீதி திருவிழாவில் பல்லாயிரம் தமிழ் மக்கள் கலந்து கொண்டிருக்கக்கூடிய இந்நேரத்தில் இந்த மாநாடு வெறும் 20 க்கும் குறைவானவர்களுடன் நடத்துவதன், காரணம் என்ன? இந்த 20 பேரில்; ஆரம்பநிகழ்வுக்கு வந்த கனடிய தேசியகீதம் பாடவந்த, வரவேற்பு நடனம் ஆடவந்த, மங்களவிளக்கு ஏற்றவந்தவர்களும் அடங்குவர்.
இந்த வகை மாநாடுகள் வர்த்தக சமூகம் மற்றும் இளம் திறமைகளை ஈர்க்க வேண்டும். மாறாக அந்திமகாலத்தில் இருக்கும் ஒரு சில வயோதிப நண்பர் கூட்டமே இந்த மாநாட்டுக்கு தலைமை ஏற்று நடத்துகிறார்கள். இவர்களையே 15 ஆண்டுகளுக்கு முன்பும் இந்த மாநாட்டில் பார்க்கக்கூடியதாக இருந்தது.
350,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழும் டொரொன்டோ நகரில் சிறப்பாக, மக்களுக்கு பயனுள்ள விதத்தில் ஒரு மாநாட்டை நாம் சிறப்பாகச் செய்திருக்க முடியும்.
வெறும் கட்டுரை படிக்கும் ஒரு காகித நிகழ்ச்சியை மட்டுமல்லாமல் ஒரு தொழில்நுட்ப நிகழ்ச்சியைக் கருத்தில் கொள்ள வேண்டும். அதற்க்கான புதிய கதவுகள் சமூகத்தில் திறக்கப்படவேண்டும்.
நடந்த 16 வது இன்பிட் தமிழ் இணைய மாநாடு பலகேள்விகளை எழுப்புகின்றது. பல்கலைக்கழகத்தில் இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்து, அறை இலக்கம் தெரிந்தவர்களே போகக்கூடிய வகையில் மிகவும் மறைவாக மாநாட்டை வைத்தவர்கள் நோக்கம் என்ன?
ஏன் இந்த மாநாடு மக்களுக்கு முறையாக அறிவிக்கப்படவில்லை. மாநாடு பற்றி பத்திரிகையாளர் மாநாடு ஏன் நடத்தவில்லை? மக்கள் வரமாட்டார்கள் என்று தெரிந்தும் ஒரு குழுவினர் பல இடங்களில் இருந்து வந்து இங்கு கட்டுரை படிப்பதில், அவர்களே அவர்களுக்கு மாலை போட்டு மரியாதையை செய்து சுயஇன்பம் காண்பதில் மக்களுக்கு என்ன நன்மை? தமிழுக்கு, தமிழ் கணிமைக்கு என்ன நன்மை?
வந்தார்கள், நின்று படமெடுத்தார்கள், உண்டார்கள், மாநாடு வெற்றி என்றார்கள், சென்றார்கள். 16 மாநாடென்ன, 100 மாநாடும் இப்படியே நடத்தலாம். இப்படியே இவர்கள் எல்லோர் தலையிலும் மிளகாய் அரைக்கலாம்.
இது ஒருசிலரின் இலாபங்களுக்காக ஒரு அமைப்பின் பெயரில் நடக்கும் தொடர் பித்தலாட்டமா?
-தமிழ் சமூக நலன் விரும்பிகள்-