கனடாவின் மானிட்டோபாவில் உள்ள எல்லிஸ் அவென்யூவில் வரும் நவம்பர் 30 அன்று புதிய உணவகம் ஒன்றை கிறிஸ்டின்ஸ் பேட்டின்ஸ் என்பவர் திறக்க திட்டமிட்டுள்ளார்.
இந்த உணவகத்தில் வேகவைத்த மாட்டு வால் இறைச்சி, ஜெர்க் சிக்கன் மற்றும் வறுத்த வாழைக்காய் உள்ளிட்ட ஜமைக்காவின் விருப்பமான உணவுகள் விற்பனையாகும் என விளம்பரப் படுத்தப்பட்டுள்ளது.
இந்த உணவகத்தின் உரிமையாளரான கிறிஸ்டின்ஸ், பெரியவர்கள் உண்பதை வரவேற்பதற்கு புதிய விதி ஒன்றை உணவகத்தில் அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி உணவகத்தில் பதினைந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்படுவதாக அவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
மேலும் பெரியவர்கள் ஓய்வெடுக்கவும், ஒன்றாக நேரம் செலவிடவும், தாங்கள் ஆர்டர் செய்த உணவுகளை ஒன்றாக அமர்ந்து உண்ணவும், ஒரு அமைதியான சூழலை பேணுவதே இதன் நோக்கம் என கிறிஸ்டின்ஸ் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக உணவகத்தில் பணியாற்றி வந்த கிறிஸ்டின்ஸ், குழந்தைகளால் மற்ற வாடிக்கையாளர்களுக்கு இடையூறு ஏற்படுவதை தான் பலமுறை பார்த்திருப்பதாக கூறினார்.
இந்த நிலையில் கிறிஸ்டின்ஸ் தனது புதிய உணவகத்திற்கு விதித்துள்ள நிபந்தனைகள் இணையத்தில் பயனர்களிடம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உணவகத்தின் புதிய கட்டுப்பாட்டால், சில வாடிக்கையாளர்களை உணவகம் இழக்க நேரிடும் என பயனர்கள் பதிவிட்டனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.