எதிர்வரும் 3 ஆண்டுகளில் 10 லட்சம் புலம்பெயர்ந்தோரை நிரந்தரமாகத் உள்வாங்க கனடா தீர்மானித்துள்ளது.
புலம்பெயர்ந்தோரின் தயாகமாக திகழும் கனடா, இவ்வாறான அறிவிப்பு வெளியிடுவது புதிதல்ல என்ற போதிலும், தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு மிகப்பெரிய மக்கள் தொகையை உள்வாங்கும் சிறப்பான திட்டம் என அனைவராலும் பரவலாக பேசப்படுகின்றது.
இதுதொடர்பாக கனடா அகதிகள் குடியேற்றம் மற்றும் குடியுரிமைத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “2020ஆம் ஆண்டுக்குள்ளாக 3.41 லட்சம் பேர், 2021ஆம் ஆண்டில் 3.51 லட்சம் பேர், 2022ஆம் ஆண்டில் 3.61 லட்சம் பேர் என அடுத்த 3 ஆண்டுகளுக்குள்ளாக மொத்தம் 10 லட்சம் புலம்பெயர்ந்தோரை நிரந்தரமாகத் தங்க வைக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான சட்டம் கனடா நாடாளுமன்றத்தில் குடியுரிமைத் துறை அமைச்சர் மார்கோ மெடிசினோ சார்பில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அமுல்படுத்தப்பட்டது.
இதனால் கனடாவில் நடுத்தர சமுதாயத்தின் கட்டமைப்பை பலப்படுத்த முடியும். கனடாவில் தொழில்துறை மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி பெறும். உலகளவிலான மனிதகுல வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்ற முடியும். திறமை வாய்ந்த இளைஞர்களின் வரவு காரணமாக கனடா மக்கள் தொகை இளமை பெறும். இதனால் உலகளிலான பொருளாதார சவால்களை எளிதில் திறம்பட எதிர்கொள்ள முடியும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும் 3.41 லட்சம் புலம்பெயர்ந்தோர் நிரந்தரமாகத் தங்க கனடா அரசு அனுமதி வழங்கியுள்ளது. கனடாவின் இந்த புதிய அறிவிப்பு காரணமாக கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் குடும்பத்துடன் நிரந்தரமாகத் தங்கும் வசதி கிடைப்பதால் பல்வேறு நாட்டினத்தவர்களும் மகிழ்சியில் திளைத்து போயுள்ளனர்.