கனடாவின் டெமிஸ்காமிங் பகுதியைச் சேர்ந்த ஹெய்டி கோர்டே என்பவரால் வளர்க்கப்படும் ‘பிளாடி’ மற்றும் ‘ஃபிட்ஸ்’ ஆகிய இரு பூனைகளும், வீடுகளுக்குள் அடைந்துகிடைக்கும் வழக்கமான வாழ்க்கையைத் துறந்து, காயாக்கிங் படகுச் சாகசம், மலைப் பாதைகளில் நடைப்பயணம் என வெளிக்களச் சாகசங்களில் ஈடுபட்டு 10 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களின் இதயங்களை வென்றுள்ளன.
சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பாடகியாக வேண்டும் என்ற தனது கனவை ஒத்திவைத்துவிட்டு, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தந்தையைக் கவனித்துக் கொள்வதற்காக ஹெய்டி தனது சொந்த ஊருக்குத் திரும்பினார்.
அப்போது ஒரு துணையாக இருக்க வேண்டும் என்பதற்காக, உள்ளூர் விலங்குகள் காப்பகத்திலிருந்து ‘ஃபிட்ஸ்’ என்ற 8 வாரக் குட்டிப் பூனையைத் தத்தெடுத்தார்.
தந்தையின் நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும்போது, குளிர்காற்றில் பூனையின் காதுகள் உறைந்துவிடக் கூடாது என்பதற்காக ஃபிட்ஸைச் சிறிய பையினுள் வைத்து எடுத்துச் சென்றார். 3 மாதங்களுக்குள், அந்தப் பூனை நாயுடன் தானாகவே பக்கவாட்டில் நடக்கத் தொடங்கியது.
இதன்பின்னர், யாராலும் தத்தெடுக்க முடியாது என ஒதுக்கப்பட்ட ‘பிளாடி’ என்ற மற்றொரு மீட்புப் பூனையையும் ஹெய்டி தத்தெடுத்தார்.
வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு மீட்புக் காப்பகத்திற்குக் கொண்டுவரப்பட்ட பிளாடி, அங்கிருந்த ஊழியர்களைத் தாக்கும் அளவுக்குக் கடுமையான கோபமும் முரட்டுத்தனமும் கொண்டிருந்தது.
ஆனால், சரியான பராமரிப்பும் அன்பும் கிடைத்தால் அது மாறும் என்ற நம்பிக்கையில் ஹெய்டி அதைத் தனது பராமரிப்பில் ஏற்றுக்கொண்டார்.
தற்போது இந்த இரு பூனைகளுக்கும் பிரத்யேக மழைக் கோட்டுகள் மற்றும் இத்தாலிய வடிவமைப்பாளர் ஒருவரால் உருவாக்கப்பட்ட உலகின் முதல் “பூனைகளுக்கான பனி உடை” ஆகியவை உள்ளன.
இவற்றின் சாகச வீடியோக்கள் உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அளித்து வருகின்றன.
கடந்த மே மாதம் ஹெய்டியின் தாயாருக்குத் தோள்பட்டை முறிவு ஏற்பட்டபோது, உலகெங்கிலும் உள்ள முன்பின் தெரியாத ரசிகர்கள் கையால் பின்னப்பட்ட கையுறைகள், சாக்லேட்டுகள் மற்றும் வாழ்த்து அட்டைகளை அனுப்பி ஆதரவு தெரிவித்தனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.