ஜேர்மனி பல்லாயிரக்கணக்கான அகதிகளை இருகரம் நீட்டி வரவேற்றபோது, அதில் அந்நாட்டின் சுயநலம் எதுவும் இல்லை. போருக்குத் தப்பி வரும் அகதிகளுக்கு உதவவேண்டும் என்பது மட்டுமே, அல்லது, அதுவே முதன்மையான நோக்கமாக இருந்தது எனலாம்.
புலம்பெயர்ந்தோரை நாடுகள் வரவேற்பதன் பின்னணி
ஆனால், எல்லா நாடுகளுமே புலம்பெயர்ந்தோரை இருகரம் நீட்டி வரவேற்கின்றன என்று கூறமுடியாது.
உதாரணமாக சுவிட்சர்லாந்தைப் பார்த்தால், அங்கு நீங்கள் ஒரு சுற்றுலாப்பயணியாக சென்றால், உங்களுக்குக் கிடைக்கும் மரியாதையே வேறு. அதுவே, புலம்பெயர்ந்தோராய் சென்று குடியுரிமைக்கு முயற்சித்தீர்களானால் அது எவ்வளவு கஷ்டமான விடயம் என்பது இன்றைய நிலவரப்படி உலகுக்கே நன்கு தெரிந்த விடயம்.
பிரித்தானியாவும் அப்படித்தான். நீங்கள் உங்கள் தொழிலில் திறமை மிக்கவராக இருந்தால், உங்களை வரவேற்று வேலை கொடுப்பார்கள். எப்படியாவது பிரித்தானியாவுக்குள் நுழைந்து குடியுரிமை வாங்கிவிடலாம் என்று நினைத்தால், பின்விளைவுகள் மோசமாக இருக்கும்.
அவுஸ்திரேலியாவின் நிலையோ, படுபயங்கரம். எப்படியாவது அவுஸ்திரேலியாவுகுச் சென்று ஒரு புதுவாழ்வைத் துவங்கிவிடவேண்டுமென புறப்பட்ட ஒரு தம்பதி, ஒரு தனித்தீவில் நீண்ட நாட்கள் சிறையில் அவதியுற நேர்ந்ததைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
உங்களால் நீங்கள் புலம்பெயர்ந்து செல்லும் நாட்டுக்கு பயன் இருக்கிறதா?
ஆக, ஒரு வெளிநாட்டவரை தன் நாட்டுக்கு புலம்பெயர ஒரு நாடு அனுமதிக்குமானால், முதலில் அது பார்க்கும் விடயம், இந்த நபரால் நம் நாட்டுக்கு ஏதாவது நன்மை இருக்கிறதா என்பதுதான்.
கனடா மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?
இந்த ஆண்டின் துவக்கத்தில், ஆண்டொன்றிற்கு 500,000 புலம்பெயர்ந்தோரை கனடாவுக்கு வரவேற்பதாக அறிவித்தது கனடா பெடரல் அரசு. அடுத்த மூன்று ஆண்டுகளில், சுமார் 1.5 மில்லியன் புலம்பெயர்ந்தோரை ஏற்றுக்கொள்வது கனடாவின் திட்டம்.
ஆக, வெளிநாடுகளில் வேலை இல்லாமல் கஷ்டப்படும் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் நம் நாட்டுக்கு அழைத்து அவர்களுக்கு வேலை கொடுக்கவேண்டும் என்பதா கனடாவின் விருப்பம்?
நிச்சயம் இல்லை!
கனடாவில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது, புதிதாக பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையோ அதற்கு இணையாக இல்லை.
ஆக, கனடா வளர்ச்சியடையவேண்டுமானால், அதற்கு வேலை செய்ய ஆட்கள் தேவை. கனடாவில் அதற்கு போதுமான ஆட்கள் இல்லை. ஆகவே, மக்கள்தொகையானாலும் சரி, பொருளாதாரமானாலும் சரி, கனடா வளர்ச்சியடைய அதற்கு புலம்பெயர்ந்தோர் தேவை என்பது மறுக்கமுடியாத ஒரு உண்மை ஆகும்.
ஆகவேதான், பொருளாதார புலம்பெயர்ந்தோர் அதிக அளவில் வரவேற்கப்படுகிறார்கள், அல்லது நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறுகிறார்கள். அதே நேரத்தில், குடும்ப இணைப்பு ( family reunification) திட்டத்தின் கீழ் குறைவானவர்களே வரவேற்கப்படுகின்றார்கள் என்பதை நீங்கள் கவனித்தால், அது தெளிவாகப் புரியும்!