Reading Time: < 1 minute

கனடா ஒன்ராறியோவில் கிட்டத்தட்ட எட்டு மாதங்களில் பின் மிகக் குறைந்த புதிய கொவிட்19 தொற்று நோயாளர்கள் அதாவது 663 பேர் பதிவாகியுள்ளனர்.

2020 ஒக்டோபர் 18 ஆம் திகதிக்குப் பின்னர் பதிவான குறைந்தளவு ஒரு நாள் தொற்று நோயாளர் தொகை இதுவாகும். சனிக்கிழமையன்று 744 புதிய தொற்று நோயாளர்கள் பதிவான நிலையில் நேற்று தொற்று நோயாளர் தொகையில் மேலும் வீழ்ச்சி பதிவானது.

இந்நிலையில் வார இறுதி தொற்று நோயாளர் தொகையை தொடர்ந்து அவதானிப்பதன் மூலம் மாகாணத்தை மீண்டும் திறக்கலாமா? என்பது குறித்து பிரதமர் டக் போர்ட்டுக்கு ஆலோசனை வழங்க முடியும் என ஒன்ராறியோ தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி டொக்டர் டேவிட் வில்லியம்ஸ் தெரிவித்தார்.

தற்போது ஒன்ராறியோவில் தொற்றுக்குள்ளாகி கடுமையாக பாதிக்கப்பட்ட 545 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். இவா்களில் 510 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவுகளிலும் அவா்களில் 344 பேர் வென்டிலேட்டரின் உதவியுடன் சுவாசிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 24 மணி நேரத்தில் மாகாணத்தில் 22,635 சோதனைகள் நடத்தப்படட நிலையில் தொற்று நேர்மறை விகிதம் ஞாயிற்றுக்கிழமை 2.8 சதவீதமாக இருந்ததாக மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.