ஹுவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான மெங் வாங்ஷோவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.
கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் உள்ள சீனத் தூதரகம் இதனை வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில் “மெங் வாங்ஷோ சம்பவம் ஒரு நீதித்துறை வழக்கு மட்டுமல்லாது தேவையற்ற குற்றச்சாட்டுகளில் ஒரு முன்னணி சீன நிறுவனத்தை முடக்குவதற்கு அமெரிக்கா தனது அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திய செயலாகும்.
இது ஒரு மிக மோசமான நடத்தை ஆகும். கனடாவைச் சேர்ந்த இருவர் சீனாவில் கைது செய்யப்பட்டமை முற்றிலும் மாறுபட்ட விடயம். அவர்கள் சீனாவின் பாதுகாப்பு விதிமுறைகள் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்” என்றார்.
உலகளவில் பிரபல்யமான தொலைத்தொடர்பு நிறுவனமான சீனாவின் ஹுவாவி நிறுவனம், அமெரிக்காவின் தடையை மீறி ஈரானுடன் வர்த்தக தொடர்பு கொண்டுள்ளதாகவும் அமெரிக்காவின் வர்த்தக இரகசியங்களை திருட முயற்சித்ததாகவும் ட்ரம்ப் நிர்வாகம் குற்றஞ்சாட்டி வருகிறது.
இதனால் ஹுவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான மெங் வாங்ஷோ கடந்த ஆண்டு கனடாவில் கைது செய்யப்பட்டார். இதற்கு ஹுவாவி நிறுவனம் மற்றும் சீன அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இதற்குப் பதிலடியாக சீனாவில் இரு கனடா பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மெங் வாங்ஷோவை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என சீன தூதரகம் வலியுறுத்தியுள்ளது.