கனடாவின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான ஹமில்டன் துறைமுகத்தில் கழிவு நீர் கலப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 26 ஆண்டுகளாக குறித்த துறைமுகத்தில் கழிவுநீர் கலப்பதாகவே தெரிவிக்கப்படுகிறது.
1996 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் கழிவுநீர் கலக்கின்றமை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த புதன்கிழமை துறைமுகத்தில் கழிவு நீர் கலக்கப்படுவது கண்டறியப்பட்டது.
கழிவு நீர் குழாயில் ஏற்பட்ட துளை காரணமாக இவ்வாறு நீர் கசிவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், 50க்கும் மேற்பட்ட ஹமில்டன் பிரஜைகள் கழிவுகளை நேரடியாக துறைமுகத்தில் கலக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வளவு கழிவு நீர் கலந்துள்ளது என்பதை பற்றிய தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு இழைப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று என ஹமில்டன் நீர் வினியோகத்துறை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கழிவு நீர் கலப்பது தொடர்பில் கண்டறிந்த உடனேயே அதற்கு தீர்வுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கழிவுநீர் கலக்கம் விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாக ஹமில்டன் மேயர் அண்ட்ரியா ஹௌவார்ட் தெரிவித்துள்ளார்.
மிக நீண்ட காலமாக இந்த கழிவு நீர் கசிவு பற்றிய தகவல்கள் கண்டறியப்படாமல் இருந்தமை குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என மேயர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நகரின் குடிநீர் கட்டமைப்பிற்கு இந்த நீர் கசிவினால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த கழிவு நீர் கசிவினால் நேரடியாக மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் வெகு குறைவு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.