ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள வட அமெரிக்காவின் மிகப்பெரும் தமிழர் அங்காடி Majestic City தமிழர் உள்ளக வர்த்தக வளாகத்தில் நேற்று வியாழக்கிழமை (Jan 19, 2023) இரவு கொள்ளைச் சம்பவத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை அடுத்து, சந்தேக நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
மூன்று ஆயுதம் ஏந்திய சந்தேக நபர்கள் மார்கம் ரோடு மற்றும் மெக்னிகோல் அவென்யூ பகுதியில் மெஜஸ்டிக் சிட்டி மாலுக்குள் இருந்த “SAS Jewelry and work Shop” நகைக் கடையில் கொள்ளையடிக்கும் போது இரவு 7 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.
முகமூடிகள் மற்றும் ஹூடிகளை (hoodies) அணிந்துகொண்டு, துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு நகைக் கடைக்குள் நுழையும் மூன்று ஆண் சந்தேக நபர்கள், மாலுக்குள்ளிருந்த பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளன..
ஒரு சந்தேக நபர் கடையின் நுழைவாயிலை மூடுவதை காட்சிகள் காட்டுகிறது, மற்ற இருவரும் உள்ளே சென்று பொருட்களை எடுக்கத் தொடங்குகிறார்கள். சந்தேக நபர்கள் கடையை விட்டு வெளியேறும் முன் வீடியோ முடிகிறது.
திருடர்கள் உள்ளே இருக்கும்போதே யாரோ மால் வெளியேறும் கதவுகளைப் பூட்டிவிட்டனர், அவர்கள் தப்பிக்க கண்ணாடி கதவுகளை சுட்டு உடைத்து தப்பியுள்ளனர்.
மூன்று முறை சுடப்பட்ட சத்தம் கேட்டதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். சம்பவ இடத்தில் தரையில் துப்பாக்கி சன்ன உறைகள் இருந்தன.
வணிக வளாகம் திறந்திருந்த நிலையில், குழந்தைகள் உட்பட கடைக்காரர்கள் உள்ளே இருந்தபோது இந்த கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.
காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. விசாரணை நடந்து வருகிறது.