Reading Time: < 1 minute

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை நீக்க வேண்டும் என தனது நட்பு நாடுகளுடன் இணைந்து கனடாவும் போர்க்கொடி தூக்கியுள்ளது.

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் கொடூரங்கள் அம்பலமான நிலையிலேயே, மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

உக்ரைனில் போர் குற்றங்களில் ஈடுபட்டதாக ரஷ்யாவுக்கு எதிரான ஆதாரங்கள் வெளியாகியுள்ளதால், மனித உரிமை கவுன்சிலில் அந்த நாடு நீடிப்பது முறையல்ல என குறிப்பிட்டுள்ளார் கனடா வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly.

மேலும், ரஷ்யப் படைகள் தொடர்பில் கொடூரமான வன்முறைச் செயல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் பற்றிய அறிக்கைகள் தொடர்ந்து வெளிவருவதால், மனித உரிமைகளை ரஷ்யா முற்றிலும் புறக்கணித்திருப்பது அம்பலமாகியுள்ளது என அவர் தமது டுவிட்டர் பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா இனிமேலும் மனித உரிமை கவுன்சிலில் நீடிப்பது முறையல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான புச்ச, இர்பின் நகரங்களில் ரஷ்ய துருப்புகளின் காட்டுமிராண்டித்தனம் அம்பலமான நிலையில், அமெரிக்காவே மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.