உலகில் வெளிநாட்டவர்கள் தங்கி பணியாற்ற சிறந்த நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், வெளிநாட்டவர்களுக்கு சாதகமல்லாத இடங்களின் பட்டியலில் கனேடிய நகரம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பட்டியலில் ஸ்பெயின் நாட்டின் வலென்சியா நகரம், வெளிநாட்டவர்கள் தங்கி பணியாற்ற சாதகமான இடம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த வரிசையில் அடுத்த நான்கு இடங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் இரண்டாவது இடத்திலும்,
மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டி மூன்றாவது இடத்திலும், போர்த்துகல் நாட்டின் லிஸ்பன் நான்காவது இடத்திலும், ஸ்பெயின் நாட்டின் இன்னொரு நகரமான மாட்ரிட் ஐந்தாவது இடத்திலும் தெரிவாகியுள்ளது.
9வது இடத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தின் இன்னொரு நகரமான அபுதாபி இடம்பெற்றுள்ளதுடன், 10வது இடத்தில் சிங்கப்பூர் தெரிவாகியுள்ளது. சிங்கப்பூரை பொறுத்தமட்டில் எளிதான நிர்வாகம், திருப்திகரமான ஊதியம், மேம்பட்ட தொழில் வாய்ப்புகள் என காரணங்களை பட்டியலிட்டுள்ளனர்.
இதேவேளை, வெளிநாட்டு மக்கள் தங்கி பணியாற்ற சாதகமற்ற இடங்களின் பட்டியலில், முதலிடத்தில் இத்தாலியின் ரோம் எனவும், மூன்றாவது இடத்தில் கனடாவின் வான்கூவர் நகரமும் தெரிவாகியுள்ளது.
ரோம் நகரத்தை பொறுத்தமட்டில் வெளிநாட்டவர்கள் தங்கள் நாட்டில் வாழ்வது போன்றே உணர்ந்தாலும், வாழ்க்கைத்தரம் மிக மோசம் என்றே ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் ஜப்பானின் டோக்கியோ நகரம் உள்ளது.
மூன்றாவது இடத்தில் வான்கூவர் நகரம் அமைந்துள்ளது. வான்கூவர் நகரத்தை பொறுத்தமட்டில் கட்டுப்படியாகாத குடியிருப்பு கட்டணங்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் வெளிநாட்டு மக்களுடன் அவ்வளவு நட்புடன் இல்லை எனவும் ஆய்வில் குறிப்பிடுகின்றனர்.
இந்த பட்டியலில், நான்காவது இடத்தில் இத்தாலியின் மிலன் நகரமும், ஐந்தாவது இடத்தில் ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரமும் அமைந்துள்ளது.