தமிழ் நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையாது இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் 40 ஆண்டுகளுக்கு பின்னர் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த வருடம் ஒக்டோபர் மாம் 14 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்தக் கப்பல் சேவையானது நாளாந்தம் இடம்பெறும் என கூறப்பட்ட நிலையில் சீரற்ற வானிலை மற்றும் போதியளவான பயணிகள் இன்மையால் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த கப்பல் சேவை, கடந்த மே மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகும் என கூறப்பட்டு பின்னர், காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து கப்பல் கடந்த மே மாதம் 11 ஆம் திகதி காங்கேசன்துறைக்கு பரீட்சார்த்த சேவையில் ஈடுபட்டதையடுத்து 13ஆம் திகதி முதல் ஒவ்வொரு நாளும் கப்பல் சேவை ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் கப்பல், நாகைக்கு செல்வதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் தொழினுட்ப கோளாறு காரணமாக பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே இன்று மீண்டும் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சேவையில் ஈடுபடும், சிவகங்கை கப்பலானது நாகப்பட்டினத்திலிருந்து காலை 08 மணிக்குப் புறப்பட்டு நண்பகல் காங்கேசன்துறையை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, காங்ககேசன் துறையிலிருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு மீண்டும் நாகப்பட்டினத்தை சென்றடைந்தது என்றும் கூறப்பட்டது.
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையே பயணி ஒருவருக்கான ஒரு வழிக் கட்டணம் இலங்கை ரூபாயின் படி, 17,804 ரூபாய் என்றும் காங்கேசன்துறை- நாகப்பட்டினம் இடையேயான பயணச்சீட்டு கட்டணம் 16,557 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.