Reading Time: < 1 minute

கடுமையான வெப்ப காலங்களில் காட்டுத்தீயைத் தடுக்கும் நோக்கில் கனடா புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

கனடாவில் கடந்த மாதம் முன்னொருபோதும் இல்லாத வகையில் வெப்ப அலை அதிகரித்தது. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் லிட்டன் நகரம் காட்டுத் தீயால் அழிந்தது. மேற்கு பகுதிகளில் பல இடங்களில் காட்டுத் தீ பரவிய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெப்ப நிலை 30 டிகிரி செல்சியஸைத் தாண்டும்போது ரயில்களின் வேகத்தைக் குறைக்க வேண்டும். அத்துடன், பயணங்களின்போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் எவையும் ரயிலில் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய போக்குவரத்து திணைக்களம் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் இந்த அறிவுறுத்தல்கள் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

கனடாவின் மேற்கு பிராந்தியமான பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அதிகரித்துள்ள வெப்பநிலை கடும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. குறிப்பாக ரயில் போக்குவரத்துக்கள் கடும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன என போக்குவரத்து அமைச்சர் உமர் அல்காப்ரா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் பேரழிவு தரும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்க கனடா அரசு உறுதியுடன் உள்ளது. மேலும் இத்தகைய ஆபத்துக்களை தணிக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த மாத இறுதியில் கனடாவின் மேற்கு பிராந்தியங்களில் வெப்பநிலை வரலாறு காணாத வகையில் உயர்ந்த நிலையில் 500-க்கும் மேற்பட்ட திடீர் மரணங்கள் பதிவாகின.

லிட்டன் நகரத்தில் கனடாவில் வரலாற்றில் இல்லாதவாறு வெப்ப நிலை 49.6 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது.

வெப்பநிலை அதிகரித்ததை அடுத்து 130-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ பரவியது.

லிட்டன் நகரம் காட்டுத் தீயால் அழிந்தது. அங்கிருந்து சுமார் 1,000குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இருவர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் பலர் காணாமல் போயினர்.

இவ்வாறான நிலையிலேயே கடுமையான வெப்ப காலங்களில் காட்டுத்தீயைத் தடுக்கும் நோக்கில் புதிய நடவடிக்கைகளை கனடா அறிவித்துள்ளது.