Reading Time: < 1 minute

“நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகள் வீதிகளில் இறங்கி கோசமிடுவதால் ஒருபோதும் மக்களின் வறுமையை ஒழிக்க முடியாது” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு இயக்கத்தின் எதிர்கால போக்கு குறித்து, கலந்துரையாடும் வகையில் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சந்திப்பானது நேற்று கொழும்பிலுள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்வாறு தெரிவித்தார்.

இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது” கடந்த காலத்தில் இந்த நாட்டில் கூட்டுறவு இயக்கம் மிகவும் வலுவாக இருந்தது. ஆனால் 1970 சீர்திருத்தங்களுக்குப் பின்னர் அந்த நிலை மாறியது.

கூட்டுறவுச் சட்டத்தை மாற்ற யாரும் முன்வரவில்லை. இதுபற்றி ஒருமுறை அமைச்சரவையில் நான் கேள்வி எழுப்பினேன். ஆனால் அந்த அதிகாரத்தை விட்டுக்கொடுக்க அமைச்சின் அதிகாரிகள் விரும்பவில்லை. இன்று அது அரசியலாகிவிட்டது.

பலநோக்குக் கூட்டுறவு சங்கங்களில் அதிகாரத்தை கைப்பற்ற உறுப்பினர்கள் முன் வருகின்றனர். இது பெரிய நகைச்சுவையாகிவிட்டது. மக்களுக்காக என்று கூறிக் கொண்டு மக்கள் இயக்கத்தை அழிக்கிறார்கள். ஏனைய கூட்டுறவு அமைப்புகளும் முழுமையாக செயல்படவில்லை.

எனவே, கூட்டுறவு வணிகம் குறித்து புதிதாக சிந்திக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்களை நாம் 16 முறை இடைநடுவில் கைவிட்டுள்ளோம்.
எனவே இதனை 17ஆவது தடவையாக மீறினால் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

அதன்படி முதன்முறையாக அந்த விடயங்களை சட்டத்தில் இணைத்து பொருளாதார பரிமாற்ற சட்டத்தை முன்வைத்துள்ளோம். அந்தப் பின்னணியில் நாம் பணியாற்ற வேண்டும். சர்வதேசத்துடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையில் நாம் அதனை தொடர வேண்டும்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.