Reading Time: < 1 minute

கனடாவின் எட்மோன்டன் பகுதியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஒருவருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

அல்பர்ட்டா முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினரான கார்லிட்டோ பெனிட்டோவிற்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மோசடியில் ஈடுபட்ட குற்றச் செயலுக்காக இந்த அரசியல்வாதி மற்றும் அவரது புதல்வர் சார்ளஸ் பெனிட்டோ ஆகியோரை வீட்டுக் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடிவரவு மற்றும் ஏதிலி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுப் பிரஜைகளை பணியில் அமர்த்தியதாகவும் அவர்களுக்கு மணித்தியாலம் ஒன்றுக்கு 10 டொலருக்கும் குறைந்த ஊதியம் வழங்கியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குடிவரவு ஆலோசனை தொடர்பான நிறுவனங்களில் எட்டு வெளிநாட்டுப் பிரஜைகள் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் கடமையில் அமர்த்தப்பட்டிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கார்லிட்டோ பெனிட்டோ திட்டமிட்ட அடிப்படையில் வேண்டுமென்றே குடிவரவு சட்டத்தை மீறியுள்ளதாகவும் அதற்கு அவரது புதல்வர் உடந்தையாக செயற்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது.

கார்லிட்டோ தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குற்றச்சாட்டுக்களை இருவரும் ஒப்புக்கொண்ட காரணத்தினால் இரண்டு ஆண்டுகள் வீட்டுக் காவல் தண்டனையும், 75000 டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.