கோவிட்19 தொற்று நோயின் பின்னரான காலப்பகுதியில் ஒன்ராறியோவில் மூன்றாவது அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வியாழக்கிழமை நள்ளிரவு முதல் மாகாணத்தில் வீட்டில் தங்கும் உத்தரவு அமுலாகும் என மாகாண அரசு தெரிவித்துள்ளது.
தனது அமைச்சரவைடன் பல மணி நேரங்கள் ஆலோசனை நடத்திய பின்னர் முதல்வர் டக் போர்ட் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மாகாணம் முழுவதுமான வீட்டில் தங்கும் உத்தரவு இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது. இந்த உத்தரவு 28 நாட்களுக்கு நீடிக்கும்.
ஒன்ராறியோவில் கோவிட்19 தொற்று நோய் நிலைமை தீவிரமாகவும் கவலைக்குரியதாகவும் உள்ளது. எனவே, கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என இது குறித்த அறிவிப்பை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் டக் போர்ட் கூறினார்.
அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகளின் கீழ் அனைத்து அத்தியாவசியமற்ற சில்லறை விற்பனை நிலையங்களும் நேரடி விற்பனைக்காக மூடப்படும். உணவகங்களில் உட்புற பரிமாற்ற சேவை தடை செய்யப்படும். ஜிம்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு சேவைகள் மூடப்படும். சில்லறை விற்பனையாளர்கள் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை பொருட்களுக்களை நுகர்வோரின் கோரிக்கையின் பிரகாரம் வீடுகளுக்கு விநியோகம் செய்ய முடியும்.
அத்தியாவசிய பொருட்களை விற்க மட்டுமே சில கடைகள் குறைந்தபட்ச திறன் வரம்புடன் திறந்திருக்க அனுமதிக்கப்படும். பெரிய வணிக வளாகங்கள் இணையவழி கோரிக்கைகளைப் பெற்று பொருட்களை விநியோகம் செய்ய முடியும்.
தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்கள், சேவை நிலையங்கள் 25 வீத திறன் வரம்புடன் செயற்பட அனுமதிக்கப்படும்.
வேலை, பாடசாலை செயற்பாடுகள், அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு, மருத்துவ தேவை உள்ளிட்ட அத்தியாவசிய காரணங்களைத் தவிர்த்து ஒன்ராறியர்கள் வீடுகளை விட்டு வெளியேறுவது புதிய நடைமுறைகளின் கீழ் சட்டவிரோதமானதாகக் கருதப்படும்.
அத்தியாவசியமான காரணங்கள் இல்லாவிட்டால் முடிந்தவரை வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என ஒன்ராறியர்களிடம் முதல்வர் டக் போர்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, அரசின் அவசர கால உத்தரவுகளை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அது குறித்துக் கண்காணிக்கப்படும் என அரச தலைமை வழக்கறிஞர் சில்வியா ஜோன்ஸ் நேற்று குயின்ஸ் பார்க்கில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது கூறினார்.
மக்கள் அரசின் உத்தரவுகளை கடைப்பிடிப்பது மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுவது முன்பை விட இப்போது மிகவும் முக்கியமானது எனவும் அவா் தெரிவித்தார்.
ஒன்ராறியோவில் கொரோனா வைரஸின் புதிய பிறழ்வு வைரஸ்கள் மிக வேகமாகப் பரவி வரும் நிலையில் தொற்று நோயின் எழுச்சியைக் கட்டுப்படுத்த வீட்டில் தங்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு ரொரண்டோ, பீல் மற்றும் ஒட்டாவா பிராந்திய மருத்துவ நிபுணர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து அமைச்சரவை கூடி ஆராய்ந்து அவசர நிலையை அறிவித்துள்ளதுடன், வீட்டில் தங்கும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோ மாகாணத்தில் மீண்டும் மிக வேகமாக அதிகரித்துவரும் கோவிட்19 தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த சனிக்கிழமை முதல் மற்றொரு 4 வார கால சமூக முடக்கல் அறிவிக்கப்பட்டது.
எனினும் முன்னரைப் போன்று முழுமையாக வீட்டிலேயே தங்கியிருக்கும் உத்தரவுகள் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் இல்லாமல் அவசர கால கட்டுப்பாட்டு நடவடிக்கையாக (emergency brake) இந்த புதிய முடக்க நிலை அறிவிக்கப்பட்டது.
ஆனால் கொரோனா வைரஸின் புதிய பிறழ்வு வைரஸ்கள் மிக வேகமாகப் பரவி வரும் நிலையில் தொற்று நோயின் எழுச்சியைக் கட்டுப்படுத்த வீட்டில் தங்கும் உத்தரவு அவசியம் என ரொரண்டோ, பீல் மற்றும் ஒட்டாவா பிராந்தியங்களில் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்திய நிலையிலேயே மீண்டும் அரசர நிலை அறிவிக்கப்பட்டு, வீட்டில் தங்கும் உதரவும் ஒன்ராறியோ மாகாண அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.