கனடாவில் பனிக் காலம் தொடங்கியுள்ள நிலையில், வீடற்றவர்களுக்கு உதவும் வகையில் மனிடோபாவின் முதல் நாடுகளின் சுகாதார மற்றும் சமூக செயலகம் பொதுமக்களிடம் உதவிக் கோரியுள்ளது.
ஆண்டுதோறும் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த உதவித் திட்டத்தின் மூலம், இம்முறை 400 உதவிப் பொருட்கள் கொண்ட பொதிகளை உருவாக்க செயலகம் திட்டமிட்டுள்ளது.
இதனால் குளிர்காலத்தில் அவதிப்படும் வீடற்றவர்களுக்கு உதவ முதல் நாடுகளின் சுகாதார மற்றும் சமூக செயலகம், நன்கொடைகளை எதிர்பார்த்துள்ளது.
வின்னிபெக்கில் வணிகங்கள் மற்றும் சமூக குழுக்களிடம் இந்த உதவிகள் எதிர்பார்க்கப்படுகின்றது.
செயலகத்தின் தகவல் தொடர்பு நிபுணர் ரெனாட்டா மகோன்ஸ் கூறுகையில், ‘நாங்கள் வருடத்திற்கு ஒருமுறை இதைச் செய்ய முயற்சிக்கிறோம், அதைச் சிறப்பாகச் செய்ய முயற்சிக்கிறோம் வீடற்ற சமூகத்தில் உள்ளவர்களுக்குத் தேவையான சில பொருட்களை வழங்குவதன் அடிப்படையில் முடிந்தவரை அதிக தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறோம்’ என கூறினார்.
275 போர்டேஜ் அவனியூவில் உள்ள ஆறாவது அல்லது 17ஆவது மாடியில், குறித்த நன்கொடை பொருட்களை எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி வரை கையளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வின்னிபெக் மற்றும் தொம்சனில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள செயலகத்தின் விருந்து, உறவினர்களுடனான நிகழ்ச்சியில் இந்த பொருட்கள் வீடற்றவர்களுக்கு கையளிக்கப்படவுள்ளது.