விலைவாசி அதிகம் என்பதற்காக கெட்டுப்போன உணவை வாங்கிச் சாப்பிடாதீர்கள் என்கிறார் கனேடிய நிபுணர் ஒருவர்.
கனேடியர்கள், Best before date முடிந்த உணவை சாப்பிடுவதுண்டா என்பதை அறிய, ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 30 வயது முதல் 45 வயது உடையவர்களில் 41 சதவிகிதம்பேர், தாங்கள் கடந்த ஆண்டு Best before date முடிந்த உணவை சாப்பிட்டதாக தெரிவித்தார்கள்.
45 வயது முதல் 65 வயது வரையுள்ளவர்களில் 24 சதவிகிதத்தினரும், 60 வயது முதல் 75 வயதுவரையுள்ளவர்களில் 20 சதவிகிதத்தினரும், 1946க்கு முன் பிறந்தவர்களில் 10 சதவிகிதத்தினரும், இளைய தலைமுறையினரில் 10 சதவிகிதம்பேரும், தாங்கள் கடந்த ஆண்டு Best before date முடிந்த உணவை சாப்பிட்டதாக தெரிவித்தார்கள்.
Best before date என்பதற்கும் காலாவதி திகதி அல்லது expiry date என்பதற்கும் வித்தியாசம் உள்ளது என்பது உண்மைதான். அதாவது, காலாவதி திகதியைக் கடந்த உணவை உண்ணவே கூடாது, ஆனால், Best before dateஐக் கடந்த உணவுகளைப் பொருத்தவரை, அந்த திகதிக்குப் பின் அந்த உணவுகளின் தரம் குறைந்திருக்கும் என்று பொருளேயொழிய, அதை சாப்பிடக்கூடாது என்பது பொருள் அல்ல.
என்றாலும், Best before date திகதி முடிந்த சில உணவுப்பொருட்கள், குறிப்பாக, இறைச்சி, நாற்றம் ஏற்படும் அளவுக்கு மோசமாகியிருக்கும் பட்சத்தில், அல்லது, Best before date திகதி முடிந்த முட்டைக்கோஸ் பூசணம் பூத்திருப்பது தெரிந்தும், இதுபோன்ற உணவுப்பொருட்களை வாங்கி உட்கொள்வதால், நீங்கள் மிச்சம் பிடிக்க நினைத்த பணத்தைவிட அதிக பணத்தை மருத்துவமனையில் செலவிடவேண்டியிருக்கும் என்கிறார் உணவுத்துறை நிபுணரான பேராசிரியர் Sylvain Charlebois.
விடயம் என்னவென்றால், ஒரு காலத்தில் Best before date திகதி பார்த்துப் பார்த்து உணவுப்பொருட்களை வாங்கிவந்த மக்கள், கொரோனா காலகட்டம் மற்றும் உக்ரைன் போர் துவங்கியதால் ஏற்பட்ட விலைவாசி உயர்வுக்குப் பிறகு, விலை குறைவான பொருட்கள் கிடைக்குமா என்று பார்க்கத் துவங்கிவிட்டார்கள்.
ஆகவே, விலை குறைவாக கிடைக்கிறது என்பதற்காக, கெட்டுப்போன உணவை சாப்பிடாதீர்கள், அது உடல் நலத்தை பாதிக்கக்கூடும் என்கிறார் பேராசிரியர் Sylvain Charlebois.