Reading Time: < 1 minute

சென்னை: லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

ஜெர்மனி நாட்டில் உள்ள லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக ஊழியர்கள் பற்றாக்குறையால் அந்த நிறுவனத்தின் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் இருந்து பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜெர்மனியின் பிராங்க்ஃபர்ட் நகரில் இருந்து, சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானமும், சென்னையில் இருந்து பிராங்க் ஃபர்ட் செல்லும் விமானமும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து பிராங்க்ஃபர்ட் நகருக்கு, லுப்தான்சா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் தினமும் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. நள்ளிரவு 12.10 மணிக்கு வரும் லுப்தான்சா விமானம், அதிகாலை 12.50 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.

இந்நிலையில், விமான ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் சென்னை விமான நிலையத்தில் இருந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் தவித்து வருகின்றனர்.